‘மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ்’ – காப்புப் பருவம் - பாடல் :1


ஒளிதோன்ற ஒளியிலிருந்து
     யிர்தோன்ற (1) உயிருடம்பில்
             உணர்வும் தோன்ற
உணர்வொன்றி உயர்-இழிவும்
                    ஒன்றின்றி உளம்ஒன்றி
                          உரையா உண்மைக்
களிதோன்ற களிமாறிக்
கவல்தோன்றக் கணக்கின்றிக்
கறங்கி நின்ற
கருத்தில்லா முன்னோரின்
கருத்தறிய முதன்முதலில்
கடுநா நின்றும்
விளிதோன்ற விளியுணர்த்தும்
மொழிதோன்ற தமிழின்வழி (2)
விளக்கம் தோன்ற
விளங்கியபின் மாந்தர்உளம்
விலங்கிலிருந்து உயர்ந்தோங்கி
வேறாய்த் தோன்றும்
அளிதோன்ற அனைத்துயிரின்
அகத்திருளை அகற்றுதமிழ்
அறிவை வேண்டி
அழகுதமிழ்ப் பழகுமறை
                     மலையடிகள் தமைக்காக்க
அழைப்பாம் அன்றே!

------------------------------------------------------------------------
(1)- இக்கருத்து அடிகளின் கருத்தே :
‘ஒளியுருவில் ஒலியுருவுதோற்றுவித்த தொன்னாளில்’:
 ‘அம்பிகாபதி அமராவதி’ நாடகக்கடவுள் வாழ்த்து -வரி:6
(2)- ‘தமிழ் இன்ன காலத்திலேதான் தோன்றியதென்று கட்டுரைத்துச் சொல்ல இயலாது’ என்று அடிகள்தம் ‘உரைமணிக் கோவை’ (பக்கம் 64) கூறியதால்,
தமிழின் தோற்றக் காலத்தைக் குறிப்பிடக் கூடவில்லை
------------------------------------------------------------------------



‘மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ்’


முன்னுரை : (2)


அரசர்கல் லூரியில்யான் 
     பயின்றக்கால் ‘பிழையில்லா
         அருந்த மிழ்ப்பா  
வரைதற்கே இனியாரும்
     வாராரோ?’ எனயெண்ணி  
         வருந்தி யக்கால் 
முருகமர்ந்த பாநெஞ்சின்
     முதுக்குறைவால் எமைத்தொடர  
         முதலா மாண்டில்
இருவரவண் எழுந்திட்டார்  
     ‘நா.முத்து நிலவன’; ‘துரை’  
          என்போர் அன்னோர்!  
-- புலவர் செந்தலை ந.கவுதமன்



மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ் - நா.முத்துநிலவன்

‘முத்துநிலவன்’ “பிறந்த” கதையும் 
‘மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ்’ 
எழுந்த கதையும்...

                   திருவையாறு அரசர் கல்லூரியில் நான் இரண்டாம் ஆண்டு தமிழ் இலக்கியம் படித்தபோது,-(19வயது) ‘தமிழ் இலக்கிய - இலக்கணக் கடல் அய்யா தி.வே.கோபாலர் அவர்கள் முதல்வராக இருந்தார்கள்.
                 அவர் ஏற்றியிருந்த பழந்தமிழ் வெறி வேறொரு முனையில் ‘தமிழியக்கம்’ என்னோடு நெருங்கக் காரணமானது. தற்போது கோவை அருகில் உள்ள சூலூர் பாவேந்தர் பேரவையின் செயலர் புலவர் செந்தலை ந.கவுதமன் அண்ணா அப்போது அதே கல்லூpயில் இறுதியாண்டு படித்துவந்தார் அவர்தான் எனது இயற்பெயரை  மாற்றி ‘முத்து நிலவன்’ எனப் பெயர் சூட்டினார். 
                  அப்போது தமிழியக்கத்தின் மாநிலத் தலைவராக இருந்தவர் பின்னாளில் தமிழகச் சட்டப்பேரவைத் தலைவராக இருந்த பேரா. தமிழ்க்குடிமகன் அவர்கள்.  பொதுச்செயலராகத் தஞ்சைப் பேரா.இரா.இளவரசு அவர்களும், மாநில நிர்வாகக் குழுவில் திருச்சி ஈவெரா கல்லூரிப் பேராசிரியர் கு.திருமாறன் அவர்களும் தற்போது ‘முதன்மொழி’ இதழாசிரியராக இருக்கும் திரு அரணமுறுவல் அவர்களும் இருந்தார்கள்.
                   எனக்கு நெருக்கமான திருக்காட்டுப்பள்ளித் தோழர் ஞானசேகரன் ‘அறிவுறுவோன்’ ஆகவும், தோழர் பெ.மணிராஜ் ‘மணியரசன்’ஆகவும், திருவையாறு நீதிமன்றத்தில் பணியாற்றிய தோழர் நா.விஜயரங்கன் ‘மன்னைமறவன்’ ஆகவும், செந்தலை ந.கவுதமன் அவர்களுடன் அப்போது படித்து -தற்போது கரந்தைக் கல்லூரியில் பணியாற்றும் - பாலசுப்பிரமணியன் ‘இளமுருகன்’ ஆகவும் என் கூடப் படித்த சு.துரை ‘கோவை வாணன்’ ஆகவும், சீ.விஜயகுமார் வெற்றிச்செல்வனாகவும், செந்தலையாருக்கும் முன்னே அதே கல்லூரியல் படித்த ஜெயபால் -தற்போது சென்னையில் ‘பொன்னி பதிப்பகம்’ நடத்திவரும் - ‘வைகறை வாணன்’ ஆகவும்  என, பற்பலரும்; இவ்வாறே பெயர் மாற்றம் பெற்றனர்.
                    சூழலே தனித் தமிழ்மயமாக இருந்த நேரம் அது. ‘தனித்தமிழ், பகுத்தறிவு பொதுவுடமை’ எனும் முப்பெரும் கொள்கை முழக்கோடு தமிழ் மறவர்களாய்த் திரிந்த காலம்!

                  கண்டஇடத்திலும் வெண்பா ஈற்றடி கொடுத்து விரைந்து முடிப்பவர் பாராட்டப்படும் இனிய சூழல் ! (திருவையாறு காவிரியாற்றில் ஆடிப்பெருக்கின் பெருவெள்ளத்தில் நட்டாற்றில் குதித்து -பெண்கள் விடுதிப்பக்கமாக- முழுகி நீந்திக் கொண்டிருக்கும் போது,  வந்த ‘வசமாக மாட்டினேன் வந்து’ எனும் ஈற்றடியை நான். ‘நிசமாகச் சொல்கிறேன், நீச்சலறி யாமல் வசமாக மாட்டினேன் வந்து’ என வெகுவிரைவில் முடித்து காவிரியோடு தமிழில் நீச்சலடித்த பருவம்! 
  அதே ஆண்டில் தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை எனப்படும்  ‘மறைமலையடிகள்’ அவர்களின் நூற்றாண்டு விழாவுக்கான ‘மறைமலையடிகள் பிள்ளைத் தமிழ்ப் போட்டி அறிவிப்பும் வந்தது. 
                  அப்போது– எனது பத்தொன்பதாம் வயதில், இரண்டாமாண்டுக் கல்லூரி விடுமுறையில்- எழுதிய நூல்தான் ‘மறைமலையடிகள் பிள்ளைத் தமிழ்’

இதில், இப்போதைய முத்துநிலவனைத் தேடாதீர்கள்!!!

இது எனது ‘பழைய பனையோலை’!

இனி ஒவ்வொரு பாடலாகப் பார்ப்போம்…

உங்கள் கருத்தை அறிந்து தொடர எண்ணம் …
அன்புடன், 
நா.முத்துநிலவன், 
30-03-2011

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் – 2010ஆம் ஆண்டுக்கான பரிசுப் போட்டிகள் அறிவிப்பு


1. சு.சமுத்திரம் நினைவுப் பரிசு -
    விளிம்பு நிலை மக்களைப் பற்றிய படைப்புக்கு -      
-ரூ.10,000
2. கு.சின்னப்ப பாரதியின் பெற்றோர்கள்
    பெருமாயி-குப்பண்ணன் நினைவுப் பரிசு – நாவலுக்கு
-ரூ5,000
3. எழுத்தாளர் புதுமைப் பித்தன் நினைவுப் பரிசு – சிறுகதை நூலுக்கு -      
           -ரூ.4,000
4. அமரர் சேதுராமன்-அகிலா நினைவுப் பரிசு – குழந்தைகள் நூலுக்கு
            ரூ.2,500
5. குன்றக்குடி அடிகளார் நினைவுப் பரிசு – தமிழ் வளர்ச்சிக்கான நூலுக்கு-
            ரூ.4,000
6. செல்வன் கார்க்கி நினைவுப் பரிசு – கவிதை நூலுக்கு
            ரூ.2,000
7. வ.சுப.மாணிக்கனார் நினைவுப் பரிசு – மொழிபெயர்ப்பு நூலுக்கு-
            ரூ.2,000
8. ப.ராமச்சந்திரன் நினைவு குறும்படம்2- ஆவணப்படம்2க்கான பரிசுகள் -
            ரூ.2,500 வீதம் 4 பரிசுகள்

படைப்புகள் ஒவ்வொன்றிலும் 4 படிகளை  அனுப்ப வேண்டும்


 கடைசி நாள்: 30-04-2011
அனுப்ப வேண்டிய முகவரி:
பொதுச்செயலாளர்-தமுஎகச.,
மாநிலக்குழு அலுவலகம்,
28/21,வரதராஜபுரம் பிரதான சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை-600 018
----------------------------------------------------------------

நா.முத்து நிலவன் பேச்சு!

இளைஞர்களுக்கு உரிமையும் உண்டு! கடமையும் உண்டு!
கல்லூரி விழாவில் கவிஞர் நா.முத்து நிலவன் பேச்சு!
புதுக்கோட்டை-மார்ச் 17
 இந்தியாவின் எதிர்காலத்தை உருவாக்குவதில் இளைஞர்களுக்கு, உரிமையும் உண்டு கடமையும் உண்டு இந்த இரண்டையும் உணர்ந்து தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்வோரே தன்முன்னேற்றத்தில் மட்டுமல்ல இந்தியமுன்னேற்றத்திலும் வெற்றிபெறப் போகிறார்கள் என்று கவிஞர் முத்து நிலவன் கூறினார்.
 இங்குள்ள மாமன்னர் கல்லூரியின் ‘குடிமக்கள் நுகர்வோர்மன்ற’ துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள்; சங்கத்தின் மாநில துணைத்தலைவரும் பிரபல பேச்சாளருமான கவிஞர் நா.முத்துநிலவன் மேற்கண்டவாறு பேசினார்.
வுpழாவிற்கு கல்லூரியின் பொறுப்பு முதல்வர் பெ.சேதுராமன் தலைமையேற்றார். மாவட்ட வழங்கல் அலுவலரும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலருமான அ.ராஜசேகரன் ‘குடிமக்கள் நுகர்வோர்மன்ற’ கல்லூரிக் கிளையின் பெயர்ப்பலகையைத் திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். கவிதை, கட்டுரை பேச்சு, பாடல் மற்றும் கோலப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவியர்க்குப் பரிசளித்து ‘நல்லாசிரியர்’ மு.மெய்யர் வாழ்த்துரை யாற்றினார். வழக்குரைஞர் மு.ரெங்கசாமி, பேராசிரியர்கள் சா.விஸ்வநாதன், ச.ரவிச்சந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
இவ்விழாவில் பேசிய கவிஞர் முத்து நிலவன் மேலும் கூறியதாவது:
‘இன்றைய இளைஞர்- மாணவர்களுக்குப் பொறுப்பே கிடையாது’ என்பது போலப் பலரும்; நினைக்கிறார்கள்.. ஒரு சிலர் அப்படி இருந்தாலும் பெரும்பாலான மாணவர் அப்படிஇல்லை என்பதே உண்மை! சமுதாயம் எப்படி இருக்கிறதோ அப்படித்தான் இளைய-மாணவர் சமுதாயமும் இருக்கும்
இந்திய சுதந்திரப் போராட்டத்திலும், உலகில் நடந்த சமுதாய-அரசியல் புரட்சிகளிலும் அந்தந்த நாட்டின் அத்தனை பேரும் பங்கேற்றதில்லை. மூன்று முதல் ஐந்து விழுக்காடு மக்களே அதுபோன்ற போராட்டங்களில் நேரடியாக பங்கேற்றதாகத்தான் வரலாறு சொல்கிறது. மற்றவர்கள் அந்த முன்னணி வீரர்களை நம்பி பின்னால் சென்றார்கள். நீங்கள் அந்த பின்னணி வீரர்களாக இருப்பதும், நேரடிக் களம் காணும் வெற்றி வீரர்களாக இருப்பதும் உங்கள் உரிமைகளையும் கடமைகளையும் எந்த அளவுக்கு உணர்ந்திருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே அமையும்.
நுகர்வோர் உரிமை இரண்டு தன்மைகளைக் கொண்டது. ஒன்று தன்னலம் சார்ந்தது, இரண்டாவது நம் தேசநலம் சார்ந்தது. ஒரு பொருளை வாங்கும்போது நட்;டம் அடைவதும், பொருள் இழப்பு நேர்வதும் தன்னலம் சார்ந்தது என்றாலும் அந்தப் பொருளின் தன்மை சார்ந்து தேச நலமும் அதற்குள் அடங்கியிருக்கும். இந்த இரண்டையும் நுட்பமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
பெண்களிடம் ‘நாம் கருப்பாக இருக்கிறோம் அதனால் அழகாக இல்லை’ என்னும் தாழ்வு மனப்பான்மையை விளம்பரங்கள் விதைக்கின்றன. அழகுசாதனப் பொருளால் கருப்பான நிறம் சிவப்பாக முடியுமா என்பதை சிந்திப்பதோடு, உழைப்பின் நிறமே கருப்புத்தான் என்பதையும் சேர்த்து சிந்தித்துப் பார்க்கவேண்டும். பன்னாட்டு வியாபாரிகள் நம் மனநிலையை மாற்றுவதற்காகச் செலவழிக்கும் தந்திரமே இதுபோன்ற விளம்பரங்கள். இதுபோலவே ஐம்பது காசு மிட்டாய் விளம்பரம் ஒன்றும், ஒரு பற்பசை விளம்பரமும் பெண்களைக் கேவலப்படுத்துவதை புரிந்துகொண்டு, அதுபோலும் பொருள்களை பயனற்ற பொருள் என்பதால் மட்டுமல்ல மட்டமான விளம்பரத்தின் காரணமாகவும் ஒதுக்கித் தள்ளவேண்டும்.
அதேபோல, இளநீரையும், பதநீரையும், கம்பங்கூழையும், நீராகாரத்தையுமே பருகிப் பல்லாண்டுகள் வாழ்ந்த நம் முன்னோர்களிலிருந்து விலகி, ‘கோலா’ குடிப்பதை ஒரு நாகரிகம் போல மாற்றிய வியாபாரத் தந்திரத்தையும் இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அந்த விளம்பரங்களில் நடிக்கும் ‘பிரபலங்கள்’ பல லட்சம் வாங்கிக் கொண்டு, நம்மைக் குடிக்கச் சொல்லி ஆடிப்பாடிச் சிரிக்கிறார்கள்.
கோலிசோடா, குண்டுசோடாக்களை கிட்டத்தட்ட விழுங்கி ஏப்பமிட்டு விட்;ட ‘கோலா’ பானங்களைக் குடிக்கிறபோது நமது பண்பாடும் கேவலப்படுத்தப் படுகின்றது. புhரம்பரிய உணவுப்பழக்க மாற்றத்தால் நம் உடல் நலக்கேடும் உடன் நிகழ்வாகிறது. இதுபோன்ற பன்னாட்டுக் கொள்ளை வியாபார உத்திக்குள்; நம் நாட்டு சிறுதொழில் நசிவு போன்ற பொருளாதாரச் சிக்கலும் இருக்கிறது.
நாகரிகம் எனும் பெயரில் இந்த வியாபார விளம்பரங்களுக்கு நாம் விலைபோனால், நாளை நம் நாடே பொருளாதார அடிமைத் தனத்தில் வீழ்ந்து விடும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். நல்ல உணவு, நல்லநீர், நல்ல சுற்றுச்சூழல் போல நல்ல பண்பாடும், நல்ல அரசியலும் கூட நம் ஒவ்வொருவரின் உரிமை. அதற்காகத்தான் நம் தலைவர்கள் பல்வேறு தியாகங்களைச் செய்து சுதந்திரப் போரில் குதித்தார்கள், தம் இன்னுயிர்களைப் பலியிட்டார்கள்.
தியாகிகள் விட்டுச் சென்ற நம் தேசத்தாயைக் காப்பாற்றுவது நம் ஒவ்வொருவரின் -குறிப்பாக இளைஞர்களின்- உரிமை. அதற்கான பணியில் நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்வதும், மக்களைத் தயார்ப் படுத்துவதும் நம் கடமை. இதுதான் நுகர்வோர் மன்றத்தின் நுட்பமான பணியாக இருக்க வேண்டும்’
இவ்வாறு பேசிய முத்துநிலவன் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களைக் கௌரவித்ததோடு, அனைத்துத் துறை மாணவ உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு விழா ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்த மன்ற ஒருங்கிணைப்பாளர் பேரா.சு.மாதவன் செயல்திட்டங்களையும் வெளியிட்டுப் பேசினார்.
சேகர்,மு.பழனியப்பன், கா.காளிதாஸ், லூகாஸ் உள்ளிட்ட பேராசிரியர்களுடன் அனைத்துத் துறைகளையும் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவியரும் விழாவில் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாணவர்தலைவர் மா.சுந்தரராஜ் வரவேற்க, முனைவர் பட்ட ஆய்வுமாணவரும் மன்றச் செயலாளருமாகிய கி.கோவிந்தன் நன்றி கூற, நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவெய்தியது.
-----------------------------------------------------------------------
நன்றி: ‘தினமணி’ – நாளிதழ் 17-03-2011-வியாழன் (திருச்சி பதிப்பு) பக்கம்-2.

என்னைக் கவர்ந்த வலைப்பூக்கள்:-2

எனது இலக்கிய இயக்க முன்னோடியும்,
‘பூ’ தமிழ்த் திரைப்படத்தின் மூலக்கதையான ‘வெயிலோடு போய்’ உள்ளிட்ட தமிழின் ஆகச்சிறந்த சில சிறுகதைகளின் ஆசிரியரும், சிறந்த படைப்பாளியும், தொடர்ந்த இடையறாத படிப்பாளியும், தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத இலக்கிய இயக்கமான ''தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க''த்தின் பொதுச்செயலாளருமான --இனிய, மற்றும் வெகு அரிதான இயல்பான மனிதர்-- தோழர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் வலைப்பூவை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் நான் பெருமைப் படுகிறேன்.. அவசியம் தொடர்ந்து படிக்க வேண்டிய அவரது வலைப்பக்கம்:

அன்புடன்,
நா.முத்து நிலவன்,
12-03-2011
மதியம் 2.00

எனக்குப் பிடித்த வலைப்பூ - படைப்புகள் :-2


எனது வலைப்பூவை உருவாக்கித் தந்த --‘மின்தமிழில்’ எனது முன்னோடியாக விளங்கும்-- புதுக்கோட்டையைச் சேர்ந்த மாமன்னர் கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் மு.பழனியப்பன் அவர்களின் இந்தக் கட்டுரை இணையத்தில் இணைய விரும்பும், தொடங்கும் தமிழார்வலர் அனைவரும் படிக்கவேண்டிய தகவல்கள் கொண்டதாக உள்ளது. நண்பர்கள் படித்துப் பயன்பெற வேண்டுகிறேன்.

அன்புடன்,
நா.முத்து நிலவன்,
12-03-2011
மதியம் 1.30

என்னைக் கவர்ந்த வலைப்பூக்கள் : 1

முனைவர் மு.இளங்கோவன் அவர்களின் வலைப்பூ உருவ நேர்த்தியிலும். உள்ளடக்க அடர்த்தியிலும் என்னைப் பெரிதும் கவர்ந்து விட்டது.
இணையத் தமிழ்ப் பயிலரங்கை ஊர்ஊராக கல்லூரி-பள்ளிகள் தோறும் முக்கியமாக ஆசிரியப் பயிற்சிக் கல்லூரிகளில் நடத்த வேண்டும்.
நண்பர்கள் அவசியம் பார்க்க அவரது இணையத்தமிழ்ப் பணியில் இணைய வேண்டுகிறேன்
அவரது வலைப்பூவைப் பார்க்க
http://muelangovan.blogspot.com/
- நா.முத்து நிலவன்
 

எனக்குப் பிடித்த வலைப்பூ படைப்புகள் : 1


kfspu; jpdf; ftpij : Nt.kjpkhwd;  

தெய்வக் குத்தம்
கனவில் அவள் வந்தாள்
கனவிலும்
தூங்கிக் கொண்டிருந்த
என்னைத் தட்டியெழுப்பி
எனக்கொரு
பிரச்சினை என்றாள்.
.
நான்கு கைகளோடு நின்ற
அவளைக் கண்டு மிரண்டு,
யார் நீங்கள்? என்றேன்.
என் பெயர் காமாட்சி
ஊர் காஞ்சிபுரம் என்றாள்.
.
அய்யோ கடவுளா!
கடவுளுக்கே பிரச்சினையா?
ஆச்சரியத்தோடு
கணவனாலா என்றேன்.
கணவனால்
பிரச்சினை இல்லை
பிரச்சினைகளைப்
புரிந்து கொள்ளாமல்
கல்போல் நிற்பவன்
கணவனா என்றாள்.
.
புரியவில்லையே என்றேன்.
தினம் தினம்
நான் அவமானத்தால்
செத்துப் பிழைக்கிறேன்
என் பெண்மை
கேவலப்படுத்தப்படுகிறது
என்று உடைந்தாள்.
நான் பதட்டமாகிப் போனேன்
அய்யோ உங்களையா?
யார் அவன்? என்றேன்.
கோயில் குருக்கள் என்றாள்.
குருக்களா!
என்ன செய்தார் அவர்?
அதிர்ச்சியாகக் கேட்டேன்.
.
தினம் தினம்
கருவறையின் கதவுகளை
உட்பக்கமாக சாத்திக்கொண்டு
என்னை நிர்வாணப்படுத்தி அபிஷேகம்…
என்று சொல்லிக்
கொண்டிருக்கும்போதே
அவமானத்தால் கதறி விட்டாள்.
.
பின் நிதானித்து
குருக்கள் வாயில்
மந்திரம் இருக்கலாம்
மரியாதை இருக்கலாம்
ஆனால்
இதை
பெண்ணின் மனநிலையில்
புரிந்து கொள்
அவமானம் புரியும் என்றாள்.
.
சரிதான், ஆனால்
இதற்கு என்ன செய்ய முடியும்
என்றேன்-மிகுந்த வருத்தத்தோடு.
ச்சீ… இப்படிக் கேட்க
உனக்கு வெட்கமாக இல்லை?
உக்கிரமாகிப் போனாள் காமாட்சி
கோபத்தோட தொடர்ந்தாள்
எல்லாத் துறைகளிலும்
பெண்களுக்கு உரிமையும்
ஒதுக்கீடும் வேண்டும் என்று
கேட்கிறீர்களே
கோயில் கருவறைக்குள்
குருக்களாக
அர்ச்சகர்களாக
பெண்களை அனுமதித்தால்
உங்கள் புனிதம் என்ன
நாறி விடுமோ? என்று
காறித் துப்புவது போல் கேட்டு
நிலம் நடுங்க
சலங்கை உடைய
தீயைப் போல் போனாள்
காஞ்சி காமாட்சி
***
-"2002-தலித்முரசு-2002> விழிப்புணர்வு-2006  ஆகிய இதழ்களில் ஏற்கெனவே வெளிவந்த  கவிதை" எனும் குறிப்போடு, தனது வலைப்பூவில் மார்ச்-8> 2011 அன்று-  மூன்றாவது முறையாக எடுத்து வெளியிட்ட  வே.மதிமாறன் அவர்களுக்கு நன்றி.
கவிதையை வெளியிட்ட வலைப்பூ : http://mathimaran.wordpress.com/

சமச்சீர் கல்வி: அரசும், ஆசிரியர்களும்

 - நா.முத்து நிலவன்
பாரதி பாடிய ‘வாராது போல்வந்த மாமணியைத் தோற்போமோ?’ எனும் வரிகளைத் தமிழர்கள் பலரும் மறந்துவிட்டோம். ஆனால், எப்போது நினைத்தாலும் மனசைப் பிசையும் அந்த ஏக்க வரிகளை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துவதாகத்தான் இன்றைய தமிழகத்தின் கல்விச் சூழல் இருக்கிறது! பாரம்பரியம் மிகுந்த – பண்பாட்டுக்குப் புகழ்பெற்ற -- நமது தமிழ்ச்சமுதாயத்தில் மிகுந்துவரும் இன்றைய சிக்கல்களை தமிழ் இளைஞர்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பதற்கு, இவர்கள் கற்ற கல்வியே முதன்மைக்காரணமாக உள்ளது. ‘மெக்காலே’கல்விமுறை இவர்களைச் சமுதாயத்திலிருந்து பிரித்து, ‘தனக்குத்தேவையானதை அறிந்திருப்பதே அறிவு’ என்று நம்பவைத்துவிட்டது.
மனப்பாடக் கல்வி என்பதே,‘தனித்தே மனப்பாடம் பண்ணி, மதிப்பெண்களை அள்ளுவது’தானே? இதை மாற்றுவதுபற்றி, பற்பல ஆண்டுகளாக அறிஞர்கள் பற்பலர் பல்வேறுபட்ட கருத்துகளைச் சொல்லிச் சொல்லி அசந்து போனார்கள். கடைசியாக இன்றைய தலைப்புச் செய்திகளில் இடம்பெற்ற சமச்சீர் கல்வி இதற்கொரு நல்ல தீர்வைத் தரும் என்னும் நம்பிக்கையை எழுப்பிவருகிறது. ஆயினும்கூட முழுமனசாகவோ அரை மனசாகவோ தமிழகஅரசே முன்மொழிந்திருக்கும் இந்த நல்ல திட்டத்தை அரசே ‘கிடப்பில்போட’க்கூடிய அளவிற்குப் பல விஷயங்கள் நடந்து வருகின்றன என்பதுதான் இப்போது மேலோங்கி வரும் நமது கவலை.
சமச்சீர் கல்வியால் பயன்பெறப்போவது எதிர்காலச்சமுதாயம்தான் என்பதால் ‘இன்றைய பலனில்’ மட்டுமே குறியாகஇருக்கும் அரசியல்வாதிகள் இதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. பெற்றோர்களுக்கு இதன் பயன் இன்னும் சரியாகப் புரிபடவில்லை. மாணவர்களுக்குப் புரிய இன்னும் சில ஆண்டுகளாகும்.ஆனால் புரிந்துகொள்ள வேண்டிய ஆசிரியர் சமுதாயம் என்னசெய்கிறது?
தனிப்பட்ட காவலர்களைவிடத் திருடர்கள் கூட்டம் எப்போதுமே ‘அட்வான்சாக’ இருக்கும் என்பது உலக உண்மை! அதுதான் சமச்சீர் கல்வி விஷயத்திலும் நடந்து வருகிறது! சமச்சீர் கல்வி தொடர்பாக மக்கள் கருத்தறியும் குழு, தமிழ்நாடு முழுவதும் சுற்றிவந்தபோது, ஆங்காங்கே அவர்களைச் சந்தித்து, கட்டுக்கட்டாக இதன் ‘தீமை’களைப் பற்றி எழுத்துவடிவத்தில் கொடுத்தவர்கள் ‘மெட்ரிக்’ பள்ளிகளின் தாளாளர் பெருமக்களே! சமச்சீர் கல்விக்கான ஆதரவுக் கருத்தைவிடவும் எதிர்ப்புக் கருத்தே அதிகமாக வந்ததைக் கண்டு அவர்களே திகைத்துப் போயினர் எனும் செய்தி சோகமானது என்பதைவிடக் கேவலமானது என்றுதானே சொல்லவேண்டும்?
 சம்பளக்கமிஷன் அறிக்கை குறித்துக் காட்டிய அக்கறையில் நூற்றில் ஒருபங்கைக் கூட சமச்சீர் கல்வி அறிக்கை குறித்து ஆசிரியர் அமைப்புகள் காட்டவில்லையே! ஏன்?!?  சம்பளக் கமிஷன் அறிக்கை குறித்து ஆசிரியர் அமைப்புகள் அக்கறை காட்டுவதை நான் குறை கூறவில்லை. அது ஆசிரியர்களின் உரிமை சார்ந்தது, நியாயமானதும்கூட. 1985-86இல் நடந்த ‘ஜேக்டீ’ போராட்டத்தில், தமிழகத்திலேயே அதிகபட்சமாக 55நாட்கள் சிறையிருந்த ஆசிரியர்களில் நானும் ஒருவன்!
எத்தனையோ போராட்டங்களை இணைந்து நடத்தியிருக்கும் ஆசிரியர் அமைப்புகள், தமது சமுதாயக் கடமையைச் சரியாகச்செய்யக் கிடைத்த நல்ல வாய்ப்பாகக் கருதி, ‘சமச்சீர் கல்வியை உடனே செயல்படுத்துக’ என்று, மாநில அளவில் ஒரேகுரலில் எதையும் செய்யவில்லையே! ஏன்?
அரசை எதிர்த்துக்கிளம்பும் ஆவேசஅமைப்புகள் ‘சமச்சீர்கல்வி எதிர்ப்பாளர்’களை எதிர்த்துச் சிறு சத்தம்கூட எழுப்பவில்லையே, ஏன்? அண்மையில் கடந்த 24-10-2009 சனிக்கிழமை அன்று மாநிலஅளவில் நடந்த ‘பத்துஅம்சக் கோரிக்கை’ பேரணியில்கூட பத்தாவது கோரிக்கையாகவே (‘சப்ஸ்டிட்யூட’ போல) சமச்சீர் கல்வி இடம்பெற்றதே! ஏன்? இது ‘பத்தோடு பதினொன்றுதான்’என்றுசொல்லாமல் சொல்கிறார்களா?   சங்கத்தலைவர்களின் அறிக்கையில்மட்டும் அவ்வப்போது சமச்சீர்கல்விஆதரவு இடம்பெற்றால் போதுமா?  ஆங்காங்கே சில கருத்தரங்கம் நடத்தியது மட்டும் போதுமா?அல்லது பணப்பலனுக்காகவோ ஆசிரியர் சிலரின் உரிமைக்காகவோ நடந்த மாவட்ட ஆர்ப்பாட்டங்களில் தலைவர்கள் சிலர் சிலநிமிடம் சமச்சீர் கல்வி பற்றிப் பேசியது மட்டும் போதுமா? அனைத்து ஆசிரியர் அமைப்புகளும் இணைந்து, மக்களையும் சேர்த்துக்கொண்டு இதற்கென்றே மிகப் பெரிய இயக்கங்களை நடத்த, என்ன தடை?
நல்லாசிரியர் விருதுபெற்ற பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களும் இந்தத் தமிழ்நாட்டில் தானே இருக்கிறார்கள்? அவர்கள்கூட சமச்சீர் கல்வி குறித்து ‘வாய்மூடி மௌனிகளாக’ இருப்பது ஏன்? ஒருவேளை எப்போதுமே மௌனமாக இருப்பதற்காகத்தான் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறதா?
கல்விக் கடமையைச் சரியாகச் செய்யும்போதே சமுதாயத் கடமையையும் சேர்த்துச் செய்ததற்காகத்தான் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுவதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். கல்வி சார்ந்த சமுதாயக் கடமை என்றால் ‘சமச்சீர் கல்வி’யை நடைமுறைப் படுத்த உதவுவதைவிட வேறென்ன சமுதாயக் கடமை நல்ல ஆசிரியர்களுக்கு  இருக்கமுடியும்? இப்போது மெட்ரிக் பள்ளிகளில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு, தமது பிள்ளைகள் படித்துவரும் ‘தரமான மெட்ரிக்’ கல்விக்கு சமச்சீர் கல்வித் திட்டத்தால் பாதிப்பு வந்துவிடுமோ எனும் சந்தேகம் எழுந்திருக்கிறது. இதேபோல, சமஸ்கிருதம் மற்றும் அரபி மொழிகளை ஓரியண்டல் பள்ளிகளில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு, தமது பாரம்பரிய மதவழி மொழிக்கல்வி மதிப்பிழந்துவிடுமோ எனும் அச்சமும் எழுந்திருக்கிறது. இந்தச் சந்தேகத்தையும் அச்சத்தையும் போக்கி, அவர்கள் விரும்பும் மதஉரிமையோடும் மதவழி மொழியோடும் தமிழ்நாட்டில தமிழ்மொழியைப் படித்தாகவேண்டிய அவசியத்தையும், சமச்சீர் கல்வியின் நன்மைகளையும் உணர்த்தவேண்டிய அவசியம்  உள்ளதே. இதை அரசும் ஆசிரியர்களும்தானே செய்யமுடியும்?
பத்தாம்வகுப்பு வரை எந்தவகைப் பள்ளியில் படித்தாலும் 11,12ஆம் வகுப்புகளை தமிழ்நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டத்தில்தான் படித்தாக வேண்டும்.  ஏற்கெனவே ஒன்றாம்வகுப்பு முதல் பத்தாம்வகுப்புவரை தமிழ்ப்புத்தகம் மட்டும் ஒன்றாகத்தான் இருக்கிறது எனவே மற்ற பாடப்புத்தகங்களும் ஒன்றுபோலவே இருப்பது குழந்தைகளுக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் நல்லது என்று எடுத்துச்சொன்னால் புரிந்துகொள்வார்கள். அதாவது தற்போது தமிழ்நாடு முழுவதும் 11, 12 வகுப்புகளில் இருப்பதுபோல அனைத்து வகுப்புகளுக்கும் ஒரே மாதிரியான தரமான பாடப்புத்தகம் ஆரம்பமுதலே வந்தால் பெற்றோர் வேண்டாமென்றா சொல்வார்கள்? அரசும், ஆசிரியர்களும் எடுத்துச்சொன்னால், நிச்சயம் ஒத்துழைப்பார்கள்.
அரசுப்பள்ளி, மெட்ரிக்பள்ளி, ஆங்கிலோ இந்தியன்பள்ளி, மற்றும் சமஸ்கிருத /அரபி ஓரியண்டல் பள்ளி என நால்வகைப் பள்ளிகளின் பத்தாம்வகுப்பு மாணவர்க்கு நால்வகைப் பாடப்புத்தகங்கள் போலவே தேர்வுகளும் மதிப்பெண் பட்டியல்களும் இதுவரை நான்கு வகையாகத்தான் இருந்துவந்தன. இந்த வழக்கம் கடந்த ஆண்டே முடிவுக்கு வந்துவிட்டது, அதாவது ‘சமச்சீர்கல்வியின் முதல்கட்டமாக, எந்தவகைப் பள்ளியில் எத்தனை மதிப்பெண்ணுக்குத் தேர்வு எழுதினாலும் அரசுப்பள்ளிபோல 500 மதிப்பெண்ணுக்கே மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும் என, சமச்சீர் கல்விக்கு முன்னோட்டமாக ‘சமச்சீர் மதிப்பெண் பட்டியல்’ வந்துவிட்டது! 11ஆம் வகுப்புக்கு வரும்போது நால்வகைக் கல்விமுறையும்தான் ஒன்றாகிவிடுகிறதே! இந்த முதல்கட்டத்தைச் சிறப்பாக நிறைவேற்றிய பள்ளிக்கல்வித்துறையை சமச்சீர் கல்வி ஆதரவாளர்கள் மனதாரப் பாராட்டினார்கள். வழக்கம் போல் எதிர்ப்பாளர்கள் நொந்துபோனார்கள்!
அடுத்த கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பிற்கும் ஆறாம்  வகுப்பிற்கும் சமச்சீர் கல்வித்திட்டத்தின் அடிப்படையில் புதிய பாடத்திட்டம் எழுதுவதற்கான பணியைத் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை தற்போது தொடங்கியிருக்கிறது. இங்குதான் ‘தமிழக அரசின் கல்வித்துறையிலும் ‘சமச்சீர் கல்வி எதிர்ப்பாளர்கள் சிலரின் சமர்த்தான வேலைகள் நடந்துகொண் டிருக்கின்றனவோ எனும் சந்தேகம் எழும்படியாக சிலநிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.
ஏற்கெனவே தமிழகஅரசு நடத்திவரும் ஆரம்பப் பள்ளிகளில் முதல் நான்கு வகுப்புகளுக்குப் பாடநூல்களுக்குப் பதிலாக விளையாட்டுமுறை அட்டைகள் வழியும்,ஆடல் பாடல் கதைகள் வழியாகவுமே பாடங்கள் கற்பிக்கப் படுகின்றன. பாடநூல் உண்டென்றாலும் முன்புபோல் அவற்றுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை. பேரா.முத்துக்குமரன் குழுவினர் தந்திருக்கும் சமச்சீர்கல்வி அறிக்கையிலும் ஆரம்ப வகுப்புகளுக்குப் பாடநூல்களை விடவும் செயல்வழிக் கற்றலுக்குத்தான் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ஆனாலும் கூட, ‘அடுத்த ஆண்டுமுதல் ஒன்றாம் வகுப்பிற்கும் ஆறாம் வகுப்பிற்கும், சமச்சீர்கல்வித் திட்டம் நடைமுறைக்குவரும்’ என்று அறிவித்திருக்கும் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை, ‘ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரையான பாடநூல் தயாரிக்கும் பணிகளை மட்டும் தொடங்கியது’ எப்படி? சமச்சீர்கல்வி அடிப்படையில் அட்டைகள் தயாரிக்கும் திட்டம் என்றால் சரி. பாடநூலுடன்....என்ற சமச்சீர்கல்வி அடிப்படையில் 'பாடநூல் தயாரிப்புமட்டும்' நுழைந்தது’ எப்படி? இதில் பாடநூல் எழுதுவோர்க்கும் ‘தேர்வு’ நடத்தப்பட்டது பெரிய நகைச்சுவை!
பாடத்திட்ட மாற்றம், பள்ளிச்சூழல் மாற்றம், தேர்வுமுறை மாற்றம், அண்மைப்பள்ளி, தாய்மொழிவழிக் கல்வி ஆகியவற்றோடு வரும் சமச்சீர் கல்வியை நடைமுறைப் படுத்தும்போது, பாடத்திட்ட மாற்றத்திலேயே குழப்பமென்றால் எப்படி?  பள்ளிக்கல்வித்துறை, பாடத்திட்ட மாற்றக் கருத்துருவை இணையதளத்தில் இட்டுவைத்தது பாராட்டுக்குரியது என்றாலும், பாடநூல் மாற்றம் தவிரவும் பார்க்கவேண்டிய சமச்சீர் கல்வித்திட்டப் பணிகள் பலஉள்ளனவே! ‘இது வழக்கமான பாடநூல் மாற்றம்தான், நாம் அஞ்சத்தேவையில்லை’ எனும் எதிர்க்கருத்தை மாற்றிட, சமச்சீர் கல்விக்கு உரிய மற்ற திட்டப்பணிகளையும் உடனே தொடங்கவேண்டும். இது தமிழக அரசின் கையிலேயே உள்ளது.
இதோடு, ‘மெட்ரிக்பள்ளிக் கல்வி முறையும், ஆங்கில வழியும் தொடரும் என்று பள்ளிக் கல்வி அமைச்சரே பேசியிருப்பதான ஒரு குழப்பத்தகவலும் வருகிறது. அரசும்,ஆசிரியர்களும் மௌனம்கலைத்து, கலந்துபேசிச் செயல்படவும் அதில் உறுதிகாட்டவும் வேண்டும். கல்வியாளர்கள் வசந்திதேவி, எஸ்.எஸ். இராஜகோபாலன் என ஒருசிலரே இதுபற்றிப் பேசுகிறார்கள். சமூக அக்கறையுள்ள ஆசிரியர்கள்--சங்கங்கள், பெற்றோர்கள், கல்விஅலுவலர்கள்,  சமூகஆர்வலர்கள் கலை-இலக்கியவாதிகள் எனப் பலரும் பங்களிக்க வேண்டிய நேரமல்லவா இது? இல்லாவிடில் வாராது போல்வந்த மாமணியாம் சமச்சீர்கல்வியைத் தமிழர்கள் தோற்றுவிடுவோமோ?’ என்று நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது! சமச்சீர் கல்வி என்பது, வெறும் கல்விக்கானதல்ல, சமத்துவ சமூகத்துக்கானது என்பதைப் புரிந்து கொண்டு, அனைவரும் இணைந்து விரைந்து செயல்பட்டால் கல்விமாற்றம் மட்டுமல்ல சமூகமாற்றமும் சாத்தியம் தான்!
 -------------------------------------------------------------------------------------------------------------------- வெளியிட்டமைக்கு நன்றி : ஞாயிறு, 29 நவம்பர் 2009  -- http://www.keetru.com/   
---------------------------------------------------------------------------------------------------------------------


பாடிப்பறந்த ‘வானம்பாடி’ கவிஞர் பாலா

--நா.முத்து நிலவன்-- 
பிரபல தமிழ்க்கவிஞரும், இலக்கியவிமர்சகரும், சாகித்ய அகாதெமியின் தமிழ்மொழிக்குழு ஒருங்கிணைப்பாளராக ஐந்தாண்டுகள் பணியாற்றியவருமான ஆங்கிலப்பேராசிரியர், தமிழ்க்கவிஞர் டாக்டர் பாலா தமது 63ஆம் வயதில் சென்னையில் 22-09-2009அன்று காலமானார்.
தமிழகஅரசின் சிறந்த கவிதைநூலுக்கான விருது, சிற்பியின் கவிதைவிருது, உட்பட பலப்பல விருதுகளைப் பெற்றவர் கவிஞர் பாலா. ‘சர்ரியலிசம்’(1977), ‘புதுக்கவிதை ஒரு புதுப்பார்வை’(1981), ‘பாரதியும்-கீட்சும’;(1982), ‘கவிதைப்பக்கம்’(1986), ‘தமிழ்இலக்கியவிமர்சகர்கள’;(1992), ‘முன்னுரையும் பின்னுரையும்(1995), ‘திண்ணையும் வரவேற்பறைகளும்’(1999), ‘இன்னொரு மனிதர்கள்’(2002), ‘நினைவில் தப்பிய முகம்’(2007), முதலான கவிதை மற்றும் விமர்சன நூல்களுடன், மீரா, மேத்தா, சிற்பி ஆகியோரின் தமிழ்க்கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும் வெளியிட்டிருக்கிறார்.
பாலா தமிழ்மொழிக்குழு ஒருங்கிணைப்பாளராக (2002-2006ஆம் ஆண்டுகளில்) பணியாற்றிய போதுதான் சாகித்திய அகாதெமி சாமானியர்களுக்கும் அறிமுகமானது. அதுவரை ஐந்துநட்சத்திர விடுதிகளிலேயே நடந்துவந்த அகாதெமிக் கருத்தரங்கம், முதன் முதலாக கவிஞர்மீரா-வின் அஞ்சலிக் கூட்டமாக, சிவகங்கையில் உள்ள அவரது வீட்டு வாசலில் --தெருவில் மேடையமைத்து, மக்கள் மத்தியில்-- நடந்ததை கவிஞர் அப்துல் ரகுமான் நெகிழ்ந்துபோய்க் குறிப்பிட்டது அதில் கலந்துகொண்ட அனைவருக்கும் காலகாலத்துக்கும் மறக்காது.
சிற்பி-(2002-‘ஒரு கிராமத்து நதி’-கவிதைத்தொகுப்பு), வைரமுத்து(2003-‘கள்ளிக்காட்டு இதிகாசம’;- நாவல்),ஈரோடுதமிழன்பன்(2004- ‘வணக்கம்வள்ளுவ’-கவிதை), மேத்தா (2006-‘ஆகாயத்துக்கு அடுத்தவீடு’- கவிதை), ஆகிய 4 கவிஞர்கள,; தமது படைப்புகளுக்காக சாகித்திய அகாதெமி விருதினை  அடுத்தடுத்துப் பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில், 1955முதல் சுமார் 50 ஆண்டுக்காலமாக ராஜம்கிருஷ்ணன் ஒருவர்தான் அகாதெமி விருதுபெற்ற ஒரே பெண் எழுத்தாளராக இருந்தார் 2005இல் அந்த இரண்டாவது சிறப்பினை எழுத்தாளர் திலகவதி பெற்றார் என்பதும் குறிப்பிடத் தகுந்தது. சிவகங்கை அரசர் உயர் நிலைப்பள்ளியில் -1957-62இல்- படித்தபோதே, செலவுக்கும் வழியில்லாமல் - விளையாடவும் உடல்திறனில்லாமல், சிவகங்கை நூலகத்தில் ஒரு நாளைக்கு ஒரு நூல்வீதமாக படிப்பதைப் பழக்கமாகக் கொண்டிருந்தேன். படிக்கும் பழக்கத்தோடு, பேரா.ந.தர்மராஜன் நடத்திய இலக்கியக் கூட்டங்களைக் கேட்கும் வாய்ப்பும் கிடைத்தது, பள்ளிப்பருவத்திலேயே எனக்குக்கிடைத்த பெரியவாய்ப்பு என்று கருதுகிறேன். இன்றைய எனது ‘தங்குதடையற்ற தமிழ்’ அப்போதே கிடைத்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்" என்று ‘புத்ககம் பேசுது’ இதழ் நேர்காணலில்; குறிப்பிட்டார் கவிஞர்.
1964இல் தந்தையார் இறப்புக்குப் பின் அண்ணன் திரு.சண்முகவேல் அவர்களின் ஆதரவில் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் வேதியியல் இளங்கலைப் பட்டம் பெற்றார் பாலச்சந்திரன் சேலம் - ராசிபுரம் அரசுக்கல்லூரி வேதியியல்துறையில் ஆசிரியராகச் சேர்ந்தபோது,. பக்கத்து மாவட்டமான கோவையிலிருந்து, 'வானம்பாடி'களின் "நீ" தொகுப்பு அறிமுகமானது. கலாப்ரியா -தீப்பெட்டி அளவில்- "வெள்ளம்” என்றொரு தொகுப்பையும், பச்சையப்பன் கல்லூரி "உதயம்" என்றொரு தொகுப்பையும், வெளியிட்டிருந்த நேரமது. புதுக்கவிதைகளை, மிக நேர்த்தியாக வாசிப்பதிலும், அருமையாக ரசிக்க வைப்பதிலும் 'வானம்பாடிகள்' புதிய சிகரங்களைத் தொட்டனர். தத்துவார்த்தமாகவும், கூடார்த்தமாகவுமான கவிதைகளை அவர்கள் வாசிக்கும் பாணியில் அரங்கமே கலகலத்துப் போகும்! அப்படித்தான், மு.மேத்தாவின் 'கண்ணீர்ப்பூக்கள்', சிற்பியின் 'ஒளிப்பறவை', கங்கை கொண்டானின் 'கூட்டுப் புழுக்கள்', சக்திக்கனலின் 'கனகாம்பரமும் டிசம்பர்ப் பூக்களும்', சிதம்பர நாதனின் 'அரண்மனைத் திராட்சைகள்',புவியரசுவின் ‘இதுதான்' - அரங்கத்தை ஜெயித்தபின் அச்சிலும் வந்து புகழ்பெற்றன.
இவ்வாறாக, வானம்பாடிகளால் புதுக்கவிதை ஜனநாயகமயமானதுடன், இடதுசாரிச் சிந்தனையுடன் கூடிய புதுக்கவிதை இயக்கத்தையும் தமிழில் வானம்பாடிகளே தொடங்கிவைத்தனர் என்பதுதான் முக்கியமான செய்தி. வானம்பாடிகளின் கவிதைகள் நேரடியாகப் பேசின. உண்மையை அரிதாரமில்லாமல் போட்டுடைத்தன. இந்த வானம்பாடி இயக்க மையமாக, புவியரசு, அக்னிபுத்ரன், சிற்பி,மேத்தா,கங்கை கொண்டான் கியோர் இருந்தனர் என்பதும், பண்டித இலக்கணப்புலவர்கள் இவர்களைக் கடுமையாக எதிர்த்தனர் என்பதும், 'ஒரு அப்பளத்தின் மரணம்' என்று எப்படிக் கவிதை எழுதலாம் (ஓர் அப்பளம் என்றல்லவா எழுத வேண்டும்?)என்று ஒரு பிரபலமான தமிழறிஞரின் மகன் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தார் என்பதும் சுவையான செய்திகள்.
சுமார் பத்தாண்டுகளில் -வானம்பாடிகள் பிரிந்துவிட்டபிறகு- நவீன தமிழ்க்கவிதைப் படைப்பிற்காகவும், சரியான இலக்கிய விமர்சனத்திற்காகவுமே 'சுவடு' இதழை ரம்பித்jhu; ftpQu; ghyh. அது க.நா.சு. மற்றும் வெங்கட்சாமிநாதன் போலும் இலக்கிய விமர்சகர்களே இலக்கியச் சிற்றிதழ்களின் பெரும் பக்கங்களை அடைத்துக்கொண்ட காலம். அதுபோன்ற விமர்சகர்களைப் பற்றியே "தமிழ் இலக்கிய விமர்சகர்கள்" என்றொரு  நூலை சுவடு இதழ்க் கட்டுரைகளிலிருந்து தொகுக்கும் அளவிற்கு சுவடு பேசப்பட்டது. வெங்கட் சாமிநாதனைப் பற்றி- வண்ண நிலவன், க.கைலாசபதி பற்றி- தி.க.சி., சி.சு.செல்லப்பா பற்றி  என, நல்ல நேர்மையான தகவல்களை முன்வைத்து, கூர்மையான விமர்சனத்தை சுவடு வழங்கிவந்தது. சுந்தர ராமசாமியின் புகழ்பெற்ற சிறுகதையான 'பள்ளம்' சுவடில் வந்ததுதான். 
அப்துல்ரகுமான், சிற்பி, முதலானோருடன் இணைந்து சிவகங்கையிலிருந்து கவிஞர் மீரா நடத்திய ‘அன்னம்’ இதழில் பங்கேற்றார் பாலா. பின்னர் சாகித்திய அகாதெமியில் கௌரவப் பணி. “தமிழில்ஒருவிருது அறிவிக்கப்பட்டால் எழுகின்ற அளவிற்கான மாற்றுக்குரல்கள் வேறெங்கும் இல்லைஎன்பதும் உண்மைதான்.தனக்குப்பிடிக்காத ஒருவருக்கு விருதுகிடைத்து விட்டால்,  உடனே சொந்தப்பெயரிலும், புனைபெயரிலும், சிஷ்யகோடிகளைவிட்டும் தாக்கக் கூடியவர்கள் தமிழில் அதிகம்தான். '..ஏன் விருது தரப்படவில்லை?' என்று என்னிடம் கேட்டவர்களிடம் நான் கேட்டேன்: "அருமையாக எழுதிவரும் கந்தர்வனுக்கு, நீலபத்ம நாபனுக்கு, மீராவுக்கு, திலகவதிக்கு, மேத்தாவுக்கு, வாசந்திக்கு, சிவகாமிக்கு, பூமணிக்கு, கலாப்ரியாவுக்கு ,கல்யாண்ஜிக்கு ஏன் தரவில்லை என்று நீங்கள் ஏன் கேட்க மாட்டேனென்கிறீர்கள்?" என்று --2002இல்- கேட்டவர் கவிஞர்! தான் எழுதிய ‘கவிதைப் பக்கம்’ வாரஇதழ்த் தொடரிலும், ‘புதுக்கவிதை ஒரு புதுப் பார்வை’ விமர்சன நூலிலும் இவர் அறிமுகப்படுத்திய நல்ல புதுக்கவிதைகள் ஏராளம்! அதைவிடவும் இவர் முன்னுரை கொடுத்தும் முன்னிலைப் படுத்தி மேடையேற்றியும் அறிமுகப் படுத்திய கவிஞர்கள் ஏராளம், ஏராளம்! சமீபத்தில் 25ஆம் பதிப்புக் கண்டு சாதனை படைத்திருக்கும் மு.மேத்தாவின் ‘கண்ணீர்ப் பூக்கள்’ தொகுப்புக்கும் முன்னுரை தந்தவர் கவிஞர் பாலா தான் !
மனைவி திருமதி மஞ்சுளா அவர்களோடும் மகன் கார்த்தி–மருமகள் கோமதி, மகள் ப்ரியா- மருமகன் முருகப்பெருமாள் மற்றும் பேரக்குழந்தைகளோடும் நிறைவாழ்வு வாழ்ந்த கவிஞரின் பாசத்தையும் மனிதநேயப் பண்பையும் குடும்பத்தினர் மட்டுமல்லாமல் நண்பர்களும் தமிழ்க்கவிதை ஆர்வலர்களும் என்றும் மறக்கஇயலாது. கவிஞரின் உறவினர்கள்  புதுக்கோட்டையில் இல்லாதபோதும், அமெரிக்காவிலிருந்து வந்த அவரது மகன், சென்னையிலிருந்துவந்த அவரது மகள் ஆகியோருடன் அவர்பெற்ற மாணவரும் பெறாதமகனுமான தங்கம் மூர்த்தி உள்ளிட்ட அவரது மாணவர்களும் கவிதை நண்பர்களுமே முன்னின்று கவிஞர் பாலாவின் இறுதி நிகழ்ச்சியை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இறக்கும் தருவாயிலும் கூட,ராஜம் கிருஷ்ணனின் நாவல் ஒன்றைத் தானே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து முடித்தும், பொன்னீலனின் புதிய தரிசனங்கள் நாவலை, தன் மாணவர்கள் மொழிபெயர்க்க வழிகாட்டிக்கொண்டும் இருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது!    
புதுக்கவிதைக்கு எதிரான பழமைவாதிகளோடு மட்டுமல்லாமல் ‘நவீன கவிதை’ எனும் பெயரில் புரியாமல் - புரியவிடாமல் - எழுதிக் கொண்டிருப் பவர்களோடும் கடந்த நாற்பது ஆண்டுக்காலமாகப் போராடிக்கொண்டும் முற்போக்குப் படைப்பாளிகளோடு நல்ல நட்புடனும் தனது பணியைத் தொடரந்து வந்த கவிஞர் பாலாவின் புகழ், தமிழிலக்கிய வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்! அவரது பணியை இளைய தலைமுலை தொடரவேண்டும்,  தொடரும்!  அதுவே அவருக்கான சரியான அஞ்சலியாகும்!.
--------------------------------------------------------------------------
கவிஞர் பாலாவின் படைப்புகள்  : மொத்தம் 21 நூல்கள்
கவிதை நூல்கள்:
1999 – திண்ணைகளும் வரவேற்பறைகளும் (தமிழக அரசு பரிசு பெற்றது)
2002 - இன்னொரு மனிதர்கள் (சிற்பி இலக்கிய விருது பெற்றது)
2008 – நினைவில் தப்பிய முகம்
கட்டுரை நூல்கள் :
1977 சர்ரியலிசம்
1981 புதுக்கவிதை ஒரு புதுப்பார்வை
1982 பாரதியும் கீட்சும்
1986 கவிதைப் பக்கம்
1992 தமிழ் இலக்கிய விமர்சகர்கள்
1995 முன்னுரையும் பின்னுரையும்
2007 கதவு அருகே சொற்கள்
2007 தமிழ் நவீனத்துவத்தின் முன்னோடிகள்
2007 பாரதியின் சிந்தனை வெளி
தொகுப்பு நூல் :
1996 சிற்பியின் கவிதை வானம்
1999 –  Comparataive Literature some perspectives
மொழிபெயர்ப்பு நூல்கள்:
1982 - வித்தியாபதியின் காதல்கவிதைகள்
1997 - Noon In Summer-Editor -சிற்பி கவிதை -தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு)
1995 - selected poems of Mu.Metha
தமிழ்க் கவிதை விமர்சன உரையாடல்:
2001புதுக்கவிதை விவாதம்
(கவிஞர்மீராவுடன் ஒர்உரையாடல்  ‘ஆனந்த விகடன்’ இணைப்ப)
Monograph: (Both Tamil & English)
2000 Meera: His Life and Art   (Bi-Lingual work)
English Works:
1999 - Stalin Plays and other essays in contemporary Tamil Literature
2001 – Literature and Society
நடத்திய இதழ்கள் :
‘சுவடு’-இலக்கிய இதழ்-ஆசிரியர்
பங்கேற்ற இதழ்கள் :
‘சிற்பி’யின் ‘வானம்பாடி’
‘மீரா’வின் ‘அன்னம்’
----------------------------------------------------------------------------------------------------------  
இக்கட்டுரையை வெளியிட்ட ‘ஜனசக்தி’ நாளிதழுக்கு நன்றி
-----------------------------------------------------------------------------

நூல் திறனாய்வு :

அன்பினிய நண்பர் ஆசிப் மீரான் அவர்களுக்கு,
''அமீரகத் தமிழிணைய நண்பர்கள்ஆண்டுவிழா மலர்-2002''

(I)கட்டுரைகள் பற்றிய என் கருத்துக்கள்:
--------------------------------------------------
க.எண்.தலைப்பு/எழுதியவர்-நாடு/பக்கம் (எனும் வரிசையில்...)
--------------------------------------------------
1.கிழக்குக் கடற்கரையோரம்/முகம்மது பசீர்-அமீரகம்/8-10.
2.தமிழர் சமயம்/திரு நாவுக்கரசு-ஷார்ஜா/11-12.
3.வெற்றியின் ரகசியம்/முகம்மது முஸ்தபா-துபாய்/17.
4.சார்ஜா/சத்திய காந்தன்-அமீரகம்/23-26.
5.நெருங்கோப்பு.../மா.பரமேஸ்வரன்-அமீரகம்/28-32.
6.தொடப்பத்துக்கு../இசாக்-அமீரகம்/36-37.
7.சங்க இலக்கியத்தில் அறிவியல்/கிருஷ்ணன்-சிங்கை/52-57.
8.ரசவாதம்/டாக்டர்ஜேபி-மலேசியா/59-61.
9.இஞ்சி/சி.குமாரபாரதி-aaஸ்திரேலியா/63-65.
10.தமிழ்அமெரிக்கர் வாழ்க்கை/இராம்.ரவீந்திரன்-அமெரிக்கா/75-77.
11.சமயம்/இராம.கிருட்டிணன்-சென்னை/79-87.
12.நண்பனும் திருக்குறளும்/ரெ.கார்த்திகேசு-மலேசியா/89-92.
13.சிலை வீழ்ந்தது/மணி.மு.மணிவண்ணன்-அமெரிக்கா/94-96.
14.திரும்பிப்பார்க்கிறேன்/செல்லையா.திரு-கனடா/105-106.
15.தேன்/'லாவண்யா'-சென்னை/111-115.
16.E.Com.மின்வணிகம்/உமர்-சென்னை/124,125.
17.கவிதை என்பது/வெங்கட்-கனடா/137,138.
18.தமிழ்க்குமுகாயம்/நாக.இளங்கொவன்-சென்னை/139,140.
          --------    --------    --------
இவற்றோடு--
அமீரகத் தமிழிணைய நண்பர்கள் அமைப்பின் தலைவர்   திரு முகம்மது பஷீர் அவர்கள், தனது முன்னுரையில்(பக்கம்-3)"என்ன செய்திருக்கிறோம் என்பதைப் பட்டியலிடுவதைவிடவும் தமிழுக்காக இன்னும் என்னென்ன செய்யலாமென்ற எண்ணத்தோடு எமது பயணம் தொடர்கிறது"என்பது,அடக்கமான-தெளிவான வார்த்தைகள்.
செயலாளர் திரு ஆசிப் மீரான் அவர்கள்,(பக்கம்-4,5இல்)
"ஒரு அமைப்பு,எந்த நோக்கங்களுக்காக தனது பயணத்தைத் துவங்கியதோ அந்த நோக்கத்திலிருந்து விலகிவிடாமல் பயணம் செய்வது எவ்வளவு முக்கியமோ அதேஅளவு தனது கொள்கைகளை நன்னோக்கோடு சீர்திருத்திக்கொள்வதும் மிக அவசியம்." என்பது, அவரது-மற்றும் அமீரகத் தமிழிணைய நண்பர்களது-
"புதியன விரும்பு"என்ற பாரதிவழியை  நினைவுபடுத்துகின்றது.
இனி, கட்டுரைகளைப் பற்றி...
1.கிழக்குக் கடற்கரையோரம்/முகம்மது பசீர்-அமீரகம்/பக்:8-10:
இவர் தினமும் பயணம் செல்லும் 'கொர்பக்கான் முதல் தாத்னா வரை'யான அழகான காட்சிகளைக் கட்டுரையாக்கி, அமீரகம் வருவோர் காணவேண்டிய ஊர்களைப்பற்றி எழுதி படிப்பவர்க்கு அமீரகத்தின் மீதான காதலை மிகுவிக்கிறார்.
அருகிலுள்ள ஒட்டகம்,கடற்கரை(?),தென்னைமரப் படங்கள் கட்டுரையோடு தொடர்புடைய ஊர்கள்தானா என்று தெரியவில்லையே.
2.தமிழர் சமயம்/திரு நாவுக்கரசு-ஷார்ஜா/பக்:11-12:
"தெய்வங்களுக்குத் தோற்றமும், கடவுளுக்கு அது கூறப்படாமையும், நோக்கினால்,பிறவா வாழ்க்கைப் பெருமையுடையது கடவுள் என்பதும்,பிறந்து வேறு நிலைகொண்டு இயங்குவன தெய்வங்கள் என்பதும் பழந்தமிழரின் சமயக்கொள்கைகளாகின்றன"-என்கிறார்.
இதற்கு தொல்காப்பியம்,சங்க இலக்கியம் போன்ற பழந்தமிழிலக்கியங்களில் இருந்து சான்றுகளைத் தருகிறார்.சரிதான்.
ஆனால்,'சங்க காலம்' பெருந்தெய்வ வழிபாட்டுக் காலமல்ல.
அப்போது சிறு தெய்வங்களே இருந்தன.பெருந்தெய்வங்களை ஒட்டிய சமயங்கள்" நிறுவனம்"ஆனபிறகே, இன்றைய (சாதிகளைக் காப்பாற்றும்) மதங்கள் தோற்றுவிக்கப்பட்டன.இன்றைய சிறுதெய்வங்கள்-குலதெய்வங்கள் எல்லாமும் மதங்களுடன் தொடர்புடைய பெருந்தெய்வங்களின் 'கிளை'யாக்கப்பட்டது பெருஞ்சோகம்!(இது பற்றி மேல் விவரம் வேண்டுவோர் அவசியம் படிக்கவேண்டிய நூல்:அறிஞர் ராகுல சாங்கிருத்தியாயன்(ராகுல்ஜி) எழுதிய-"வால்காவிலிருந்து கங்கை வரை")
'சங்க கால'த்தில்=
"கல்லே பரவின் அல்லது,
 நெல்லுகுத்துப் பரவும் கடவுளும் இலவே"-(புறம்:335)
அந்தக் கல்லும் எதுவோ எனில்,
"பலர் என்ஐ,முன் நின்று கல் நின்றவர்" கல்!(இது குறள்=771)
ஆனால் இக்கட்டுரையாசிரியரின் கடைசி ப்பத்திப்பொருள் மிகச்சரியானது எனும் அதேவேளையில்,சொல்லில் இன்னும் நயமிருந்திருக்கலாம் என்பதும் என் கருத்து.
        -----------     ----   -------------
3.வெற்றியின் ரகசியம்/முகம்மது முஸ்தபா-துபாய்/பக்:17.
நம்பிக்கைஊட்டும் கட்டுரை-குறிப்பாக கிராமத்து இளைஞர்களுக்கு.
        ----------     ----    -----------
4.சார்ஜா/சத்திய காந்தன்-அமீரகம்/23-26
நினைவிலுள்ள மனிதற்கெல்லாம் கனவிலுள்ள  நகரமான 'ஷார்ஜா'வைப் பற்றிய அருமையான,வரலாற்று-பொருளாதார-விளையாட்டு வளர்ச்சியுடன் இன்றைய நிலைகூறும் விபரமான கட்டுரை.
5.நெருங்கோப்பு.../மா.பரமேஸ்வரன்-அமீரகம்/28-32
கணினிப் பயனாளர்க்கு Win-zip(நெருங்கோப்பு)பற்றிய அரிய தகவல்களை-படங்களுடன் நல்லதமிழில் விளக்கும்  நல்ல கட்டுரை.
6.தொடப்பத்துக்கு பட்டுக்குஞ்சம்../இசாக்-அமீரகம்/36-37
இன்றைய தொலைக்காட்சி 'மெகாத்தொடர்', நம் கலாச்சாரத்தை மட்டுமல்ல,மொழியை, நேரத்தை,பணத்தை, பெண்களின் மன நலத்தை,எல்லாவற்றுக்கும் மேலாக நம் குழந்தைகளின் எதிர்காலத்தை எப்படியெல்லாம் பாழடிக்கிறது என்று கிண்டலாக கனவாக 'கதை'பாணியில் கட்டுரைத்துள்ளார்.
7.சங்க இலக்கியத்தில் அறிவியல் கோட்பாடுகள்/-கிருஷ்ணன்-
சிங்கப்பூர்/பக்கம்:52-57.
மலரில் நான் திரும்பவும் படிக்கநேர்ந்த-சிக்கலான-கட்டுரை இது.
"சங்க இலக்கியத்தில்" என்று தலைப்பு இருந்தாலும்,அதைவிடவும் 'இந்து மதத்தில்,பழைய இந்துப்புராண நூல்களில்' அறிவியல் கருத்துக்கள் சொல்லப்பட்டிருப்பதாக நிறுவுவதே கட்டுரைசிரியரின் நோக்கமாகப் படுகிறது.உதாரணங்களெல்லாம் அப்படித்தான் உள்ளன .குறளிலும் (திருவள்ளுவமாலையிலும்), கம்பராமாயணத்திலும் வரும் உதாரணங்கள் அணுவைப்பிளக்கும் 20 ம் நூ.ஆ.அறிவியலுடன் எப்படிப்பொருந்துமென்று தெரியவில்லை.
அணுவைப்பற்றித் தெரிந்திருந்த அளவில் அது நமக்குப் பெருமை உடையதே.ஆனால் அதைத் தொடர்ந்து கொண்டு செலுத்தாத நம்மவரின் நிலையைப் பற்றி ய்வுசெய்தாலாவது இனிமேல் அவ்வாறு நிகழாமல் தடுக்க உதவும்.
     இன்றைக்குச் சரியாக 1000 ஆண்டுக்கு முன், சுற்றிலும் 50 கல் தொலைவில் மலை இல்லாத தஞ்சையில்,அவ்வளவு பெரிய ஒற்றைக்கல்லை, அவ்வளவு உயரத்திற்கு (Grane இல்லாத காலத்தில்)
ஏற்றிய தமிழனின் பரம்பரைக்கு-'தமிழில் பொறியியல் இல்லை,தமிழ் பொறியியலைக் கற்பிக்கும் ஆற்றல் உடையதில்லை'எனும் இழி நிலை எப்படி உண்டானது?
     5ஆள் உயரத்திற்கு மதில் சுவரும், தட்டினால் நாதமெழும் தூண்களும், ஒரே கல்லில் 25 சங்கிலிகளை (கல்லாலேயே ஆன சுமார் 1000 கண்ணிகளை), உலகில் வேறு எங்கும்- இன்றும், 'செய்யமுடியாது' என்று தட்டிக்கழிக்கும் கொடுங்கை(கல் கூரை)யும், செய்து பொறியியலையும் அழகியலையும் ஒன்றாக்கி அந்தக்காலத்திலேயே அற்புதங்கள் செய்த தமிழனுக்கு...
    என்றெல்லாம் கூறுவதை-கூறவேண்டியதை விட்டு,
   
    "உயிர்களின் வளர்ச்சியைப் பரிணாமப் படிகளாக உலகுக்கு அறிவித்த டார்வின் சித்தாந்தம் இந்துமத இதிகாசங்கள் பொருந்தியிருப்பதைக் காணலாம்" (பக்:53 இறுதிக்கு முந்திய பத்தி) என்பதும்,
   
    " இன்றைய விஞ்ஞானப்படி தண்ணீரில் ஹைட்ரஜன் வாயு இரண்டு பங்கும் பிராண வாயு ஒரு பங்கும் உண்டு (H20)என்கிறோம்.இந்த உண்மை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது"(பக்:55 கடைசி3வரிகள்)என்பதும்,
   
    "முதல் நேரடி  நேரடிஒளிபரப்பு மகாபாரதப்போர்,முதல் வருணனையாளர் சஞ்சயன்"என்று(பக்:58 ஈற்றயல் பத்தி) கிண்டலாக அல்ல,'serious tone' வரும்படியாகவே கூறுவதும்,
    எந்த நோக்கத்தில் என்பது புரிந்தவர்க்குப் புரியும்.
    புரியாதவர்(plain paper)களைக் குழப்பும் வேலை எதற்கு?
   ( நம்ம தம்பி சுலைமானின் கிண்டல் பாணியில சொல்றதுன்னா, டி.வி. கம்பெனிகிட்ட  நம்ப மகாபாரதம் எழுதுன கவிஞர் சார்புல 'கண்டுபிடிப்புரிமை'(patent right) கேட்கலாமோ?)
     சிலப்பதிகார வாழ்த்துப் பாடலும்,பெரியபுராணப் பாடல்களும் (எழுத்துப் பிழை அதிகமில்லாத மலரில்) பற்பல பிழைகளோடு வந்திருப்பதும் வருத்தமளிக்கிறது.
    "கொங்கு தேர் வாழ்க்கை" எனும் குறுந்தொகைப் பாடல்,மற்றும் கண்ணப்பர் பற்றிய பெரிய புராணக்கதை போன்ற வரலாற்றாசிரியர் யாரும் ஒத்துக்கொள்ளாத புராணக்கதைகளை அறிவியல் பார்வையுடன் பார்ப்பதாக கட்டுரை ஆசிரியர் கூறினாலும், அவை புராணப் பார்வையுடனே இங்கு கையாளப்பட்டிருப்பதும் கண்கூடு.
    கவிஞர்,கலைஞர்களுக்கு எப்போதும் எந்த நாட்டிலும் 'அதீத'கற்பனை செய்து எழுத உரிமை உண்டு. அப்படியே எழுதியும் வருகிறார்கள்
.இதெல்லாம் அந்தந்தப் படைப்பாளிகளின் அற்புத-அழகு-கற்பனை என்று எடுத்துக்கொள வேண்டுமேயன்றி, அதில் 'அப்போதே எங்களிடம் அறிவியல் பார்வை இருந்தது' என்னும் வம்படிவாதம் இன்றைய வளர்ச்சிக்கு உதவுமா என்ன?.
    இதைக்காணும் மேலை நாட்டு விஞ்ஞானி யாராவது,"சரி சரி, வச்சுக்கோ, இப்ப என்ன பண்றாப்ல?" என்று கேட்டால் நாம் என்ன பதில் வைத்திருக்கிறோம்?
    இந்தியா நம் பெருமைக்குரிய நாடு.
    இதன் வளர்ச்சிக்கு எல்லாத் தத்துவங்களும்,எத்தனையோ சித்த்ர்களும், ஏராளமான தியாகிகளும்,(இந்து-முஸ்லிம்-கிறிஸ்துவர் போன்ற) எண்ணற்ற மதவாதிகளும் பங்களித்திருக்கிறார்கள் என்பதையே ஒத்துக்கொள்ளத் தயங்கும் மத அடிப்படைவாதிகளால்தானே 
இன்று, காந்தி மகான் பிறந்த மண்ணே சாந்தியின்றித் தவிக்கிறது?
   "எல்லாம் எங்கள் வேதத்தில் இருக்கிறது"-
   என்று கூவுவோரைக் கேட்கிறேன்,
   "சதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்"என்றதும் உங்கள் வேதம்தானே?
நான்கு வேதத்தையும் மட்டுமல்ல-நான்கு வர்ணங்களையும் நான்தான் படைத்தேன்' என்று சொல்லும் சாதிவெறிபிடித்த மதவழியில் இந்த நாடே சுடுகாடாய்ப் போய்விடும் எனில்,அந்த மதமே எனக்கு வேண்டாம் என்று சொல்லும் ஒடுக்கப் பட்டவரைப் பற்றி உங்கள் வேதம் என்ன சொல்கிறது?
       அனைத்து உலக மனிதர் களையும்'சகோதரர்'என்று அன்பால் அணைத்துக்கொண்ட
விவேகானந்தரின் அன்பு மதம்தான் இன்றைய தேவையே அன்றி, அடுத்தவன் பேரைக்கேட்டு அடி, அவன் வீட்டை இடி எனும், வம்பு மதமல்ல என்பது என் தாழ்மையான கருத்து.
     "எனவே,பழைய நம் நாட்டை-மொழியை-பண்பாட்டைப் பற்றிய ஆய்வு எதுவாயினும் அது இன்றைய நம் வளர்ச்ச்சிக்கு உதவுவதாக ,உண்மையிலேயே அறிவியல் பார்வை உடையதாக இருக்கிறதா? என்று கண்காணிப்பது தேசப்பற்றுள்ள ஒவ்வொரு இந்தியனின் கடமை"
     என்று பண்டித ஜவாஹர்லால் நேரு அல்ல...
இந்த புதுக்கோட்டை நா.முத்து நிலவன்தான் சொல்கிறேன்.
இல்லாவிடில்,எரிகிற கொள்ளியில்(அல்லது,குஜராத்தில்)மேலும் எண்ணெய் (அல்லது,மதவெறி)ஊற்றுகிற வேலையில்தான் போய் முடியும் என்கிற எச்சரிக்கையோடுதான் சொல்கிறேன்.
    இலக்கியம், நாடு-மொழி-இனம் கடந்து,
    இதயங்களைஇணைக்கட்டும்.

நன்றி,வணக்கம்.   
அன்புடன்,
நா.முத்து நிலவன்,
புதுக்கோட்டை
-------------------------------------------------------------------------------------------------
மலர் தொகுப்பாளரும் அமீரகத் தமிழிணைய நண்பர்கள் அமைப்பின் செயலாளருமான திரு ஆசீப் மீரான் அவர்களுக்கு நா.முத்துநிலவன் எழுதிய நூல் திறனாய்வுக் கடிதம் - 2003
-------------------------------------------------------------------------------------------------