B.A.,B.Sc.க்குத் துணைப்பாடமான எனது சிறுகதை - நா.முத்துநிலவன்

காந்திபுரத்து ராமுக்கண்ணு (கல்கியில் வெளிவந்து, நெல்லை ம.சு.   பல்கலைககழக B.A.,B.Sc.க்குத் துணைப்பாடமான எனது சிறுகதை-நா.மு.)                                        
     ச்சர்யம் பூக்க அந்தச் சிறுவனை மீண்டும் பார்த்தேன்.
     சைக்கிள் கேரியரில் அனசலாக இருந்த டீ கிளாஸ் சாய்ந்துவிடாமல் கவனமாக இருந்தான். பன்னைப் பிய்த்து மெதுவாக டீயில் நனைத்துத் தின்று கொண்டே பேசினான். சாமியார் மாதிரி பேச்சு-உலகத்தின் எந்தப் கஷ்டமும் இனி அவனை எதுவும் செய்து விட முடியாதது போல!

திரும்பவும் - மறந்து போன மாதிரி கேட்டேன்: ஆமா உம் பேரென்ன சொன்னேநிமிர்ந்து ஒரு தரம் தலையைச் சாய்த்துப் பார்த்துவிட்டுச் சொன்னான்: ராமுக்கண்ணு எம்.பி.பி.எஸ்.
     நனைந்த பன்னிலிருந்து டீ வழிந்து விடாமல் வெடுக்கென்று வாய்க்குள் தள்ளிக் கொண்டான்.
     பத்துப் பன்னிரண்டு வயதிருக்கும். அதையும் குறைத்துக் காட்டும் வாடிய முகம். பிறந்த போது உச்சந்தலையில் எண்ணெய் வைத்திருப்பார்கள் போல அலரி அடங்கிக் கிடந்த செம்பட்டை முடி. இந்த வயதிலேயே பழகிவிட்ட சாராயத்தால் பெருத்திருந்த கண்கள். வரிச்செலும்பு துருத்திய மார்புக் கூடு. வயசை மீறி ஊதிய வயிறு. சுமையற்கட்டுக் கைப்பிடித் துணிபோலக் கசங்கிக் கனமேறிப் பின்புறம் நைந்து கிடந்த டிரவுசரில் ஒரு பட்டன் கூட இல்லை. இறுக்கி முடிச்சுப் போட்டிருந்தான்.
     ஏழாம் வகுப்பில் எனக்குப் பாடம் கிடையாது. காலையில் முதல் பீரியட் முடிந்தவுடன் இவனைப் பார்க்கப் போன போதுதான் இவன் வரவில்லை என்று பையன்கள் சொன்னார்கள்.
     சார்! எம்.பி.பி.எஸ். ஸோட தாத்தா செத்துப் போயிட்டாரு சார்.
     இல்ல சார்! அவனை நா வர்றப்பக் கூட சாராயக் கடையிலே பார்த்தேன் சார்! மீனு வித்துக்கிட்டிருந்தான் சார்.
     லே! ஓவ்வொருத்தனாச் சொல்லு! தாத்தா செத்துப் போயிட்டாரா. எப்படா?
     ஆமா சார். நீங்க சொன்னதிலேர்ந்து ரெண்டு மூணு நா ஒழுங்காத்தான் சார் வந்துகிட்டிருந்தான். நேத்து ராத்திரி அவுங்க தாத்தா செத்துப் போயிட்டாரு சார். இனிமே பள்ளிக் கூடத்துக்கு வரமாட்டானாம் சார். எட்டாம்ப்பு செயாவைக் கேட்டுப் பாருங்க சார்?
     பையன்கள் அவனவனுக்குத் தெரிந்த தகவல்களைச் சொல்லி அதை உறுதிப்படுத்துவதில் குறியாயிருந்தார்கள்.
     எனக்குள் குற்ற உணர்ச்சி மௌ;ளப் பரவியது. 
     முன் நெற்றி அரித்தது.
           ‘இவனை மீண்டும் கவனிக்காமல் விட்டு விட்டோமே?...
     ஆனால் இந்த ஸ்கூலுக்குமாற்றி வந்ததிலிருந்து எனக்கு ஆச்சரியமாகவும் அவமானமாகவும் பட்டதெல்லாம் இங்கு சர்வ சாதாரணமாகவே இருந்தது! எனக்கே பயமாகவும் இருந்தது!
     தஞ்சாவூர் நகர எல்லையைத் தொட்டுக் கொண்டு இருந்தது அந்தக் காந்திபுரம். அந்தப் பக்கம் நகரம். இந்தப் பக்கம் புதுக்கோட்டை ரோட்டைத் தொடும் புஞ்சைக் காட்டுப் பகுதி. காவிரியில் தண்ணீர் வந்த அந்தக் காலத்திலேயே இது வானம் பார்த்த சீமைதான். 
இப்போது ரெண்டுங்கெட்ட பிழைப்பு. ஆலாய்ப் பறக்கும் சேரி ஜனங்கள். சாராய ஊறலை நம்பிப் பல குடும்பங்கள். வேறு வேலைக்கு வழியில்லாத வாலிபர்கள் அடியாள் வேலைக்கு பழக்கப்பட்டிருந்தார்கள். தற்காலிக சம்பாத்தியத்துக்காக முந்திரிக் காட்டுக்குப் போய்வரும் பாவப்பட்ட பெண்கள். பெரும்பாலும் மத்தியான சாப்பாட்டுக்காகவே பள்ளிக்கூடம் வரும் பிள்ளைகள். பழகிப் பார்த்த போதுதான் ஃபார்மாலிடி அறியாத பால்மனசுகள்.... பாசத்துக்கு ஏங்குவது புரிந்தது.
     பள்ளிக்கூட நாளிலேயே மத்தியானச் சாப்பாடு முடிந்ததும் சின்னச் சின்ன வேலைகளுக்குப் போய் விடும் பையன்களைப் பார்க்க நமது சுய ஆற்றாமை மேலெழும்பும். அரசாங்கம் ஆசிரியர் சங்கங்கள் அந்தப் பகுதிப் பெரியவர்கள் யாருக்குமே இது பற்றி அக்கறையில்லையோ என்று கோபம் கோபமாக வரும்.
     நான் இங்கு வந்த புதிதில் எட்டாம் வகுப்பில் ஒருத்தன் சாராய வாடையோடு இருந்ததை விசாரிக்கப் போய் ஆறாம் வகுப்பிலேயே அது சர்வ சாதாரணம்தான் என்பது தெரிந்தது. போன மாதம் கக்கூஸிருந்து வெள்ளை பலூன் ஒன்று கிடந்து பயல்கள் எடுத்து விளையாடியதை அதட்டப் போய் அதை முதல் நாள் பத்தாம் வகுப்பு சாமித் துரையின் புஸ்தக மூட்டையில் பார்த்ததாக ஒருவன் சொன்னான்!
     ஒவ்வொன்றும் முகத்தில் அறை விழுந்த நிகழ்ச்சிகள். போனவாரம் ஏழாம்வகுப்பில் அட்டெண்டென்ஸ் எடுத்தபோது  ராமுக்கண்ணு ஏன் வரலைஅடிக்கடி வரமாட்டான் போலிருக்கு? என்று கேட்டதற்குப் பையன்கள் சொன்ன பதில் ஒவ்வொன்றும் மதுரைச் சொக்கநாதருக்கு விழுந்த அடி போல - யார் யாருக்கோ மனசு வலிக்க விழுந்திருக்க வேண்டிய அடிகள் - என் மீது விழுந்தது.
     சார்! அவன் சந்தைக்குப் போயிருப்பான் சார்.
     இல்ல சார்! சந்தையில பேப்பர் பொறுக்கிக் கொண்டாந்து கடையில போட்டுக் காசு வாங்குவான் சார்.
     செவ்வாக்கிளமெ-சந்தை அன்னிக்கு-அவன் வர மாட்டான் சார்!
     மத்த நாள்லயும் சாராயக் கடையில சாக்னா வித்துகிட்டுருப்பான் சார். எப்பயாச்சும் மத்தியானச் சோத்துக்கு மட்டும் பள்ளிக்கூடத்துக்கு வந்துருவான் சார்;.
     ரெண்டு நாள் கழித்து அவன் வந்தபோது பார்த்தேன். பழுப்பேறிக் கசங்கி-அடுக்குப் பானையிலிருந்து  சுருட்டி மடக்கி எடுத்தது போல் இருந்த ஒரு சட்டையைப் போட்டுக் கொண்டு வந்திருந்தான். பழைய மஞ்சள் பை ஒன்றில் ஒரு நோட்டோ புத்தகமோ இருந்திருக்க வேண்டும்.
     எஸ்.சி. எஸ்.டி.க்கென்று இலவசப் புத்தகம் தருவார்கள் என்பதால் பெரும்பாலானவர்கள் இங்கு ரெண்டு மூன்று மாதங்களுக்குப் புத்தகமில்லாமல்தான் இருப்பார்கள். அந்தப் புத்தகமும் பள்ளிக் கூடம் திறந்து நாலைந்து மாதம் கழித்துத் தான் வரும். அதுவும் இவன் ஒழுங்காய் வராததால் கிடைத்திருக்காது.
    ஸ்டாஃப் ரூமில் தயக்கமில்லாமல் அருகில் வந்து குனிந்து கொண்டே சார்! சாயந்தரம் பள்ளிக்கூடம் விட்டதும் எங்க தாத்தா ஒங்கள வந்து பாக்குறம்ணு சொல்லச் சொல்லிச்சு சார்…” என்று சொல்லி விட்டு நிமிர்ந்து பார்த்த போது லேசாகச் சிரித்த மாதிரி தெரிந்தது.
     அட எண்ணெ தடவாட்டியும் தலையச் சீவியிருக்கிற மாதிரி தெரியுதே! வெரி குட்! சரி.. எதுக்குத் தாத்தா வர்றாராமா! சரி நீ போ கிளாசுக்குப் போய்விட்டுச் சாயந்தரம் மணி அடிச்சதும் என்னைப் பாத்துட்டுப் போகணும் என்ன?
     மாலையில் பள்ளிக்கூடம் விட்டதும் ராமுக்கண்ணு ஓடி வந்தான். கூடக் கிளம்பிய ஆசிரியர்களிடம் நான் கொஞ்சம் பின்னால் வருவதாகச் சொல்லி அனுப்பி விட்டு ராமுக்கண்ணுவுடன் ரோட்டுக்கு வந்து அருகில் இருந்த பெட்டிக் கடையில் சிகரெட் ஒன்று வாங்கிப் பற்ற வைத்துக் கொண்டே இவனிடம் பேச்சுக் கொடுத்தேன்.
     தாத்தாதான் யார் கேட்டாலும் ராமுக்கண்ணு எம்.பி.பி.எஸ். என்று சொல்லச் சொல்லியிருந்தாராம். ஏன் என்று இவனுக்குத் தெரியாதாம். தாத்தாவுக்கு மாதம் அம்பது ரூவா பிஞ்சினுவருதாம். இப்ப ரொம்ப வயசாயிருச்சாம். தேவர் வீட்டுக் கொட்டகையிலதான் இருக்காங்களாம்.
     வணக்கமுங்க.உங்களைப்பத்திப் பசங்க சொல்லிக்கிட்டேயிருக்கும்..
     வணக்கம். வாங்கய்யா அந்தக் கட்டையில உக்காருவம்என்று தாத்தாவிடம் இயல்பாகவே பேசத் தொடங்கினேன்.
     அது ஏன் பேரு கூட எம்.பி.பி.எஸ்.னு சேத்துச் சொல்றான்?நீங்கதான் அப்படிச் சொல்லச் சொன்னீங்கங்றான்!
     பாவமாக ரோட்டைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டுத் திரும்பினார். பெருமூச்சு விட்டிருக்க வேண்டும். லேசாக நடுக்கம் கண்ட தேகம். உழைத்துக் கருத்துச் சுருங்கிய உடம்பு. சுக்கு போல இரும்பாக ஒரு காலத்தில் இருந்திருக்க வேண்டும்.
     இவனோட பாட்டி ரொம்ப நா சீக்காளியாகக் கெடந்தா. ஆசுபத்திரி கூடக் கொண்டு போய்க் காம்பிக்க முடியல. இந்தப் பய ஒரு நா சொன்னான்: தாத்தா நா பெரிய படிப்புப் படிச்சு அப்பத்தாவுக்கு வைத்தியம் பாக்குறன் தாத்தாவ்னு. அந்தச் சந்தோசத்துல ரெண்டு நா கெடந்துட்டு கண்ண மூடிட்டா மவராசி. ரெண்டு வருசமாச்சி அப்ப ஏதோ வேகத்துல இவன எப்பிடியாவது டாக்குட்டருக்கு படிக்க வைக்கணும்னு ஒரு வெறி. எங்க எசமான் ஒருத்தரு தெய்வம் மாதிரி இருந்து இவன் படிப்புக்கெல்லாம் ஒதவுறம்னு சொல்லியிருந்தாரு. அவரும் போன வருசமே பொக்குனு போயிட்டாரு_ம்…”
     அப்பா இல்லியா?
     இருக்கான். வெருவாக்கெட்ட பய. எங்கிட்டோ தஞ்சாவூர்ல ரிக்சா ஓட்டிக்கிட்டு எவளோடயோ இருக்கானாம்.  இவன் ஆயி பாவம்! நல்ல சாதியில பொறந்து இவன்ட்ட வந்துகொஞ்ச நா நல்லாத் தான் இருந்தாவ. அவன் அப்படிப் போனான். இவளும் அப்பிடி இப்பிடி இருந்து பாத்துட்டு இப்ப புதுக்கோட்டைலதான் எங்கியோ இருக்காளாம். இவந்தான் இங்கிட்டே கெடந்து என்னோட சீப்படுறான்
     தொயந்து படிக்க வைக்கிணும்னுதான் பாத்தேன். இவனுக்கும் படிப்புன்னா அம்புட்டு ஆச. இப்ப ஒரு வருசமா எனக்கும் ஒடம்புக்கு முடிய மாட்டேங்கிது. நடக்கவே சீவனில்ல. ரெண்டு வவுத்துக்கு ஒரு வளியும் தெரியல. இந்த வயசிலயே எங்கெங்கயோ போறான். என்னான்னமோ லோல்பட்டு அரை வவுத்துக்குப் பாத்துக்கக் கத்துக்கிட்டான். நீங்கதான் மவராசன் - அவனுக்கு ஒரு வளியக் காட்டணும். தெய்வத்துக்கிட்ட சொல்ற மாதிரி ஒங்ககிட்டச் சொல்லிக்கிறேன். நா இன்னம் எத்தினி நாளோதெரியல
     மூச்சு வாங்கியது. கண் மூடி மூடித் திறந்தார்.
     எனக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. ஏதோ தைரியம் சொல்லி அனுப்பி வைத்தேன்.
     இவனுக்கு உதவித் தொகை வாங்கித் தரலாம் என்றால் இவன் தொடர்ந்து பள்ளிக்கூடத்துக்கு வந்திருக்க வேண்டும். தொடர்ந்து வர வேண்டும் என்றால் சாப்பாட்டுக்குஎனக்கு ராத்திரியெல்லாம் தூக்கமில்லை.
     அடுத்த நாள் அந்த ஊர்ப் பெரியவர் ஒருவரைப் பார்த்து ஒரு செட் புத்தகமும் நோட்டும் கேட்டேன். பேனாவோடு சேர்த்து வாங்கிக் கொடுத்தார். நான் ஒரு தட்டும் பையும் வாங்கி அவர் மூலமாகவே கொடுத்தேன்.
     இரண்டு மூன்று நாள் ஒழுங்காக வந்து கொண்டிருந்தான்.
     நேற்று  சந்தை  திரும்பவும் காணாமல் போய் விட்டான்.
     பள்ளிக்கூடம் விட்டதும் சந்தைப் பக்கம் போனேன். மேல் சட்டை இல்லாமல் கிழிந்த டவுசரோடும் குழிவிழுந்த கண்களோடும்..சாக்கு மூட்டை  இரண்டு கால்களுக்கிடையில் நின்றது. முக்கால் சாக்கு பேப்பர்.
     சுருங்கிய முகம் எனக்கே இங்கு வந்து இப்படி இவனைப் பாத்திருக்கவேண்டாம் போலத் தோன்றியது.
     சைக்கிளை நிறுத்தி அருகில் போனேன்.
     இந்தப் பேப்பரைப் போட்டு என்ன செய்யப் போறே?
     பேசாமல் இருந்தான். என்னைப் பார்ப்பதைத் தவிர்த்து என் பழைய சைக்கிளைப் பார்த்தான். அக்கம் பக்கம் கிடந்த பேப்பர்களில் கண் ஓடியது. சுத்தி சந்தைக் கூட்டம். சந்தைக்கே உரிய கலந்துகட்டியான இரைச்சல். எரிச்சலாக வந்தது எனக்கு.
     மீண்டும் அவனுக்கு மட்டும் கேட்பது போல் கேட்டேன்:
சொல்றா என்ன பண்ணப் போறே?
     மெதுவான குரலில் குனிந்து கொண்டே சொன்னான்:
     சட்டையில்லன்னு எல்லாரும் கிண்டலடிக்கிறாங்க…”நிமிர்ந்து பார்த்து விட்டு அவசரமாக வேறு பக்கம் திரும்பிக்கொண்டான்.
     சரி வா என்று கூறித் திரும்பினேன். அவன் வருவது போல் இல்லை.
     “…ந்தாஅங்கெ சட்டை விக்கிறாங்க. கொஞ்சம் தள்ளிக் கை காட்டினான். பையைத் தடவிப் பார்த்தேன். எனக்கே என் மீது எரிச்சல் வந்தது.
     சந்தையில வாங்க வேணாம். உனக்கு நா சட்டை வாங்கித் தாரேன் பேசாம வா.
     இல்ல சார். அங்கிட்டுப் பளைய சட்டையெல்லாம் விக்கிறாங்க. மீனு வித்து மூணர் ரூவா வச்சிருக்கேன். இந்தப் பேப்பரைப் போட்டா…” முடிக்காமல் முன்னே போனான். விறுவிறுவென்ற நடை.
     சந்தையின் ஒரு பக்கத்தில் பழைய சட்டைத்துணிகள் வியாபாரம். எங்காவது ஓரிரு சின்னக் கிழிசல்களுடன் கூடிய பல தரப்பட்ட துணிகள். சட்டை டிரவுசர் பாவாடை புடைவைகூவிக் கூவி விலை சொன்னார்கள்.
     சாரதாஸ்ரஞ்சனாஸ் விளம்பரங்கள் நினைவு வந்து பின்னணியில் இந்தச் சந்தைக் கடை இரைச்சலிட்டது. எனக்கு என்னவோ போலக் கிறுகிறுப்பாயிருந்தது. ஒரு மரத்தடியில் நின்று கொண்டேன். அவனை இப்போது தடுக்கச் சக்தியில்லை.
     பேப்பர் போட்;ட காசும் போதவில்லையாம்.
     நாளைக்கு எப்படியும் ஒரு சட்டை வாங்கி விடுவோம்என்று சமாதானப்படுத்தி. அவனையும் அழைத்துக் கொண்டு திரும்பினேன்.
     இன்று - 
     பன்னைத் தின்று டீயையும் குடித்து முடித்துப் புறங்கையால் வாயைத் துடைத்து விட்டுக் கொண்டான். டிரவுசரை ஒரு தரம் இறுக்கி முடிந்து அரைஞாண் கொடியை மேலேற்றிப் போட்டுக் கொண்டான். நூல் நூலான அரைஞாண் கயிறு.
     தாத்தாவை காலையிலேயே முனிசிபால்டி வண்டியில் கொண்டு போய் விட்டார்களாம். அழுது கூடவே ஓடியவனைப் பக்கத்தில் இருந்தவர்கள்தான் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். ராத்திரியிலிருந்து கொண்டுவந்து கொடுத்த மத்தியானச் சாப்பாட்டையும் தொடவில்லையாம்.
     சரிடீ கிளாஸைக் குடுத்திட்டு வா.
     கொஞ்ச தூரத்தில் எனது நண்பருடன் ஓவிய ஆசிரியர் வந்து கொண்டிருந்தார். இவனைப் பற்றி நேற்றுத்தான் பேசியிருந்தோம். நண்பர் கவிதை எழுதும் பழக்கமுடையவர். கண்கள் விரிய அவனைப் பார்த்தார். ஆதரவாகத் தோளைத்தொட்டு உன் பேரென்ன தம்பீ! என்று கேட்டார்.
     ராமுக்கண்ணு எம்.பி.பி.எஸ் என்று அழுத்தமாகக் கூறியவன். டீக் கிளாஸை எடுத்துக் கொண்டு கடையை நோக்கிப் போனான்.
----------------------------------------------------
(நான் எழுதி, 1990இல் கல்கி வாரஇதழில் வெளிவந்த சிறுகதை இது.பின்னர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தொகுத்து வெளியிட்ட “புதிய காற்று“ சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்று, திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலையில் B.A. B.S.c. பட்டப்படிப்பு களுக்கான  துணைப்பாட நூலில் கடந்த பல ஆண்டுகளாக இடம்பெற்றிருந்தது, தற்போதும் இருக்கிறதா என்று அந்தப்பக்கத்திலுள்ள நண்பர்கள்தான் சொல்லவேண்டும். ஏனெனில், மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தின் எம்.ஏ. முதுகலைத் தமிழ்ப்பாட நூலாக எனது புதிய மரபுகள் கவிதைநூல் கடந்த 1993முதல் இருந்தது, இதை 'இருந்தது' என்று கடந்த ஆண்டு இங்குவந்த ம.கா.ப.பேரா.முனைவர் திரு இரா.மோகன் அவர்கள் முன்னிலையில் சொல்ல, பின்னர்ப் பேசிய அவர்கள், அதென்ன இருந்தது? இப்போதும் இருக்கிறது என்றார்கள்...என்பதால்தான்...)
----------------------------------- 

தமிழை நான் வணங்கமாட்டேன்...- நா.முத்துநிலவன

கேள்வி(1) - தமிழைத் தவிர மற்ற மொழிக்காரர்கள் தம்மொழியோடு சேர்த்துப் பெயர் வைத்திருக்கிறார்களா? செந்தமிழன், தமிழ்ச்செல்வி என்பது போல,
வங்கச் செல்வியென்றோ?கன்னடக்குயில் என்றோ, மலையாள மங்கையென்றோ, தெலுங்குத் திருமதி என்றோ கேள்விப்பட்டதுண்டா? இல்லையெனில், அவர்களுக்கு மொழிப்பற்றில்லையா?

பதில்(2)  - அப்படியில்லை. ஆனால், இந்த மொழிகளின் குழந்தைகள் ஆங்கில மொழியை 5 அல்லது 6 வயதுக்கு மேல்தான் அறிமுகப் படுத்துகிறார்கள். ஆனால், தொட்டில்குழந்தையிடமே டாடி வந்திருககேன் டா என்று செந்தமிழ்ச்செல்வன் சொல்வதும், மம்மி பாரு என்று தமிழரசி சொல்வதும் தமிழ்நாட்டில்தான்.

கேள்வி(2) - தமிழைத் தவிர மற்ற மொழிககாரர்கள் கோடிக்கணக்கில் செலவழித்து, மொழிவளர்ச்சிக்கென்று மாநாடு நடத்தியிருககிறார்களோ?
பதில்(2) - நடத்தியிருக்கிறார்கள் கன்னட மொழிக்கு நடத்திய மாநாட்டின்போது பழைய இலக்கியங்களை மிகமிக மலிவாக வெளியிட்டதுதான் மாநாட்டின் சிறப்பே. இங்கோ....?

கேள்வி(3) - சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே... வாழ்த்துதுமே... சரிதானா?
பதில் (3) செயல்புரிந்துவிட்டு,  வாழ்த்தாமலே கூட இருக்கலாம். எடுத்துக்காட்டாக தமிழ்வாழ்த்தே இல்லாமல் மட்டுமல்ல, தமிழ் என்னும் சொல்லே கூட இல்லாமல் எழுதப்பட்ட திருககுறள்தான் உலகின் மிக அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்ட தமிழ்நூல் என்னும செய்தி தரும் செய்திஎன்ன? புரிந்துகொண்டால் சரி.

இதுபோலும் நடைமுறைத் தமிழ் வளர்ச்சிக்கான கேள்விகள் என்னிடம் பல உள.  பதில் ?

நானும் தமிழன்தான்...   தமிழ் உணர்வு உள்ளவன்தான்!                                    
தமிழை  வளர்க்க நினைக்கிறேன்,
அதனால்தான் வணங்க மறுக்கிறேன்.
         --------------------------------------------------------------

எனவே தான் நான் எனது கவிதைத் தொகுப்பின் முதல் பக்கத்தில் இப்படி எழுதியிருந்தேன் -
       
      தமிழ்என்றன் கருத்துமணம் தாங்கிவரும் பூந்தென்றல்!
      தமிழ்என்றன் சுடர்க்கருத்தைத் தாங்கிவரும் தீப்பிழம்பு!
      தமிழ்என்றன் துரோகிகளைத் தாக்கவரும் துப்பாக்கி!
      தமிழ்என்கைத் துப்பாக்கி தாயல்ல வணங்கி விழ!

(இக்கவிதை எழுதப்பட்ட ஆண்டு 1975,
 எழுதிய சூழல் -அனைத்துக்கல்லூரி மாணவர்க்கான கவிதைப்  போட்டி. நடுவர் கவிக்கோ அப்துல் ரகுமான்.
 இடம் - அதிராம் ப ட்டினம் காதிர்முகைதீன் கல்லூரி.                      எனது கவிதைக்கே முதல்பரிசு கிடைத்து அந்தக் கல்லூரியின் ஆண்டுமலரில் கவிக்கோ எனக்குக் கோப்பை வழங்கும் படமே அட்டையை அலங்கரித்தது.
பின்னர் எனது முதல் கவிதைத் தொகுப்பான புதிய மரபுகள் நூலில் கவிஞர் மீரா சேர்த்து வெளியிட்டார்-
புதிய மரபுகள் வெளிவந்த ஆண்டு 1993. அந்த ஆண்டுக்குரிய
தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றத்தின் முதல்பரிசைப் பெற்றதுடன், கடந்த 15ஆண்டுக்கும்  மேலாக ம.கா. பல்கலைக் கழகத்தின் முதுகலைத் தமிழ் மாணவர்களுக்குப் பாடநூலாகவே உள்ளது.

நன்றி -பேரா.முனைவர் இரா.மோகன் அவர்கள்.

             இந்நூல், இப்போதும் பாடமாகவே உள்ளது என்றும், பிரதிகள்தாம் கிடைக்கவிலலை என்றும், மறுபதிப்பு போட்டுத் தருமாறு கதிர்மீரா விடம் கேட்குமாறும், ம.கா.பல்கலைப் பேரா.முனைவர் ரவிசங்கர் அவர்கள் இன்று மாலை என்னிடம் பேசியதன் நினைவலைகளே... இன்றைய இந்தப் படைப்பு.
               
                   தமிழ் வளர்க!  தமிழ் வளர்க்க!
              ------------------------------------------------ 

பாட்டி வடைசுட்ட கதை மாறுது! - நா.முத்துநிலவன்

தினத்தந்தியில் வரும சிந்துபாத் படக்கதைமாதிரி,                        
பாட்டி வடைசுட்டு ஏமாந்த கதையும் பரம்பரை பரம்பரையா பாடநூல்களில் வந்துகிட்டே இருக்கு!

எங்க தாத்தா படிச்சதா சொன்னாரு...
எங்க அப்பாவும் படிச்சதா சொன்னாரு...
என் மகனுக்கு நானே சொல்லிக்கொடுத்ததும் நினைவிருக்கு...
அப்பல்லாம் ஒரு சந்தேக நெருடல் வந்துகிட்டே இருக்கும்...


ஒரு பாட்டி வடைசுட்டாளாம், காக்கா வந்து ஒரு வடையத் திருடிக்கிட்டுப் போயிருச்சாம். அது ஒரு மரத்துல உக்காந்திருக்கும்போது, ஒரு நரிவந்து காக்கா காக்கா நீ ரொம்ப அழ்ழ்ழ்ழகா இருக்கியே ஒரு பாட்டுப் பாடுன்னு சொன்னிச்சாம்... காக்கா,  கா கா னு வாயத் திறநது பாடுனுச்சாம்... வடை கீழே விழுந்திருச்சாம்.. நரி அதை எடுத்துக்கிட்டு ஓடிருச்சாம்... காக்கா ஏமாந்து போச்சாம்...
இதுதான் பழைய கதை!

பிறகு சுமார் 10ஆண்டுகளுக்கு முன் உலகத் தொடர்புகள் விரிவாகி... சிந்தனைகளும் கன்னாபின்னானு ஓடிய பிறகு...
கதை கொஞ்சம் மாறிச்சி...

அதாவது-

காக்காகிட்ட வந்த நிரி,  காக்கா காக்கா நீ ரொம்ப அழ்ழ்ழ்ழக்க்க்கா இருக்கிறே ஒரு பாட்டுப் பாடேன்னு கேட்டுச்சாம்...  காக்கா தான் கணினிகாலத்து காக்கா ஆச்சே! வடையத் தூக்கிக் காலுக்குக் கீழ வச்சிக்கிட்டு கா கா னு அழ்ழ்ழ்ழ்ழக்க்க்கா பாட்டுப் பாட்டுப் பாடிச்சாம்...
இப்ப...காக்கா சிரிக்க...  நரி ஏமாந்து ஓடிப்போச்சாம்...

முதல் கதையைப் பத்தி-
கிழவிகிட்ட திருடிக்கிட்டு வந்த வடைதானே போனா போகட்டும்னு  காக்கா (வடையை இழந்தது பற்றி) கவலைப் படாதுன்னு நினைச்சிருக்கேன்...

காக்கா பாட்டிய ஏமாத்துன அந்த ஏமாத்துக்கு நரி காக்காய ஏமாத்துன இந்த ஏமாத்து சரியாப் போச்சுன்னும் நினைச்சிருக்கேன்... பிநதிய கதையில ரெண்டும் ஏமாந்தது சரியா ங்கிற குழப்பம் தீரவேயில்லை...

1990கள் ஆரம்பத்தில் அறிவொளி இயக்கத்தில் பணியாற்றிய போது,  இதே கதையைப் பேராசிரியர் மாடசாமி வழியில் மக்கள் கதைகளைத் தொகுத்தபோது, பேரா.ஷாஜகான் பழைய கதைகளின் மறுவாசிப்பு என்னும் தலைப்பில் மக்களின் கருத்துக்கேட்டு வாங்கி வெளியிட்ட கதைகளில் இதுவும் வந்தபோதுதான் வெளிச்சம் முழுசாகத் தெரிந்தது..

ரெண்டு கதையிலயும் ஏமாந்தது பாட்டி அல்லவா? அட!
ரெண்டு கதையிலயும் ஏமாந்தது பாட்டி அல்லவா? ஆமா!

அதை விட்டுவிட்டு -
முதல் கதையில் ஏமாந்தது காக்கா, ரெண்டாவது கதையில் ஏமாந்தது நரின்னு சுமார் 50வருடமாச் சொல்லிக்கிட்டே இருந்துட்டோம்...

இதை, பேச்சாளர்கள் பாரதி கிருஷ்ணகுமார், திருச்சிக்கவிஞர் நந்தலாலா, மதுக்கூர் ராமலிங்கம் மற்றும் நானுமாகப் பலநூறு ஊர்களில் கல்லூரி-பள்ளிகளில் நடந்த நிகழ்ச்சிகளின் போது சொல்லியிருக்கிறோம்... உண்மையில் ஏமாந்தது பாட்டி தான் என்பது இன்றைய நம் சுதந்திர இந்தியாவில் உழைக்கும் பாட்டிகளின் வடையை யார் திருடியது என்பதான கேள்வியில் முடியும்போது அரங்கமே ஆர்ப்பரிப்பதை உணர்ந்திருக்கிறோம்!

இப்ப சுமார் 2வருடமாத்தான் சமச்சீர்க் கல்விப் புத்தகத்துலதான் இந்தப் பாடம் வரவில்லைன்னு நினைக்கிறேன்... (நம்ம பேரப்பிள்ளைகளாவது தப்பித்தார்கள்!)

அப்படியும் பழைய கதைகளை மறுவாசிப்புக்கு உள்ளாக்காமலே சொல்லிக் காசுபார்க்கக் கூடிய தமிழ்ச்சினிமாவில் அண்மையில் வந்த - கார்த்திக் நடித்த- சகுனி படத்தின் முதல் காட்சியில் அப்படியே வந்தது..!

ஒரு பாட்டி வடைசுடும்... கிராபிக்ஸ் காக்கா வந்து வடையைத் தூக்கிக்கிட்டு பறக்கும்... நரிவரும்... காக்கா ஏமாந்து போகும.. அந்த நேரம் பார்த்து கார்த்திக் -கதாநாயகன் எண்ட்ரி!- வந்து, வடையைப் பறித்துக் காக்கா கிட்டக் குடுத்துட்டு... இன்னும் எத்தனை நாள்தான் ஏமாந்து போவேன்னு சொல்வார..பாட்டியப் பத்தி அவரும் கவலைப்படல்ல...

அப்பாடா இதுக்கொரு விடிவு வராதா...ன்னு இருந்தேன். இதோ பாட்டி வடையே சுடாத காலம் வந்து என் ஏக்கத்தைத் தீர்க்கும் போல உள்ளது... (பழைய பாட்டிக்கு இது நியாயமா என்பதை மீண்டும் சிந்திக்கத்தான் வேண்டும்)

இனிமே பாட்டி வடை இல்லை மிஸின் வடை ஹா ஹா..! 

என்கிறார் எனது முகநூல் நண்பர் -- பாருங்களேன்....


https://www.facebook.com/photo.php?v=501920073202097
                      ----------------------------------------- 

BLUE TOOTH - தமிழில் எப்படிச சொல்வது?


சில சொற்களைத் தமிழில சொன்னால் நன்றாக இருக்குமே என்று நீங்கள் யோசித்தது உண்டா?  
ஆங்... அப்படியானால் இதை 
நீங்கள் படிக்கலாம்...

தேநீர்க் கடையை டீக்கடை என்று சுருக்க, நம் பாமரத் தமிழனுக்கு யார் சொல்லித்தந்தது?

ஐயா என்றால் மரியாதை, அதையே சார் என்றால் இன்னும் மரியாதை    மீண்டும்  பெரியசார் என்றால் கூடுதல் மரியாதை என்பதை    பள்ளிக் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்தது யார்?      
                                                                                   
இதில் -
சார் வேறு சார்க வேறு தெரியுமா?

ஐயா, சார்க உங்கள வரச்சொன்னாக...

என்று ஒரு சிறுமி என்னிடம் சொன்னபோது அசந்து போனேன்!

அதாவது பெரியசார் அதாவது தலைமைஆசிரியர் என்று பொருள் விரித்து வியந்தேன்.

சார் என்பது ஆங்கிலம் என்றெல்லாம் பிரித்துப் பார்க்கத் தெரியாமலே கள் விகுதி போட்டால் அது கூடுதல் மரியாதை என்பதை மட்டும் இந்தச் சிறுமி எங்கே கற்றாள்?

இதையெல்லாம் யார் இவர்களுக்குச் சொல்லித் தந்தது?

இப்படி விரியும் நம் தமிழாராய்ச்சியில் ஒரு வெளிச்சம்.

இன்றைய தினமணி-25-08-2013-ஞாயிறு- தமிழ்மணியில் ஒரு சுவையான தகவல் –

BLUE TOOTH - தமிழில் எப்படிச சொல்வது?
நீதியரசர் வெ.இராமசுப்பிரமணியனார் நாம் அன்றாடம் புழங்கிவரும் சில ஆங்கிலச் சொற்களுக்கு, அந்தச் சொல்லின் மூலப்பொருளை அறிவியல்  பார்வையில் ஆய்வுசெய்து புதிய தமிழ்ச்சொல் ஆக்கித் தரும் அரிய பணியைச் செய்கிறார்.

தினமணியின் தமிழ்மணி செய்துவரும் அளப்பரிய தமிழ்ப்பணியில் இது தனித்துவமானது.

பாருங்களேன்- டென்மார்க்-நார்வே நாடுகளை ஆண்டுவந்த BLUE TOOTH என்னும் வித்தியாசமான பெயரைக் கொண்ட ஒரு மன்னனின் பெயர்தான் ஒரு தகவலை மற்றொன்றிற்கு அனுப்பும் இந்தக் கண்டுபிடிப்புக்கு வைக்கப்பட்டதாம்!  
             
அந்த மன்ன்னுக்கு BLUE TOOTH என்று பெயர்வரக் காரணம்?             அவர் நீல பெர்ரிப் பழஙகளை விரும்பி அதிகமாகச் சாப்பிட்டுவர, அவரது பற்கள் நீலநிறமானதான் அவரது பெயர் மாற்றத்திற்குக் காரணமானதாம்!

சரி அதற்கும் இந்தக் கண்டுபிடிப்புக்கும் என்ன தொடர்பு?

உண்டு! அந்த மன்னன் தன் நாட்டிலிருந்து கொண்டே வேறுபாடு பாராட்டிவந்த பழங்குடி மக்களை ஒன்று படுத்த ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ளும்படித் தொடர்ந்து செய்து வந்தாராம்... 

நாட்டு முன்னேற்றத்திற்காக எப்படியெல்லாம் யோசித்திருக்கிறார் பாருங்கள்! இப்படித் தொடர்புகளைப் பழக்கப்படுத்திய மன்னனின் பெயரை, தொடர்பு உருவாக்கும் கண்டுபிடிப்புக்கு வைப்பது எவ்வளவு பொருத்தம்! இதில் கண்டுபிடித்தவரின் பண்பான பெருந்தன்மையைப் பாராட்டுவதா? மன்னரைப் பாராட்டுவதா?

பார்க்க தினமணி தமிழ்மணி சொல்வேட்டை இணைப்பு - http://dinamani.com/weekly_supplements/tamil_mani/2013/08/25/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88--42/article1750451.ece

தினமணியின் தமிழ்(மணி)ப் பணியும் 
நீதியரசரின் புதுச்சொல்ஆக்கமும் வாழ்க, வளர்க!

ம்... நம் காவிரி, முல்லைப் பெரியாறு, கிருஷ்ணா என மூன்று மாநில ஆறுகளும் தமிழ்நாட்டுக்கும் வந்து அந்த மாநில மக்களோடு, தமிழ்நாட்டு மக்களுக்கும் பயன்தர வேண்டும் என்று சிந்தித்துச் செயல்படக்கூடிய BLUE TOOTH யாராவது இருந்தால் ரொம்ப நல்லாயிருக்கும்ல?

(ஒன்று நிச்சமய்யா... கேரளா கர்நாடகா ஆந்திரா என்னும் மூன்று மாநிலமும் தமிழ் நாட்டுக்குத் தண்ணி தர மறுத்தாலும், ஒரே ஒரு சின்ன மாநிலம் புதுச்சேரி மட்டும்தான் எவ்வளவு வேணாலும் எடுத்துக்கன்னு நமக்குத் தண்ணி சப்ளை பண்ணுது! ஆமா... குவார்ட்டரா,, ஆஃபா, ஃபுல்லா எப்டி வேணாலும் எடுத்துக்கன்னு தண்ணி சப்ளை பண்ற ஒரே அண்டை மாநிலம் புதுச்சேரி தானுங்களே...???)

------------------------------------------------ 

தலைவா படத் தலைப்பில் TIME TO LEAD என்னாச்சு?

தலைவா ப டம் வருவதற்கு முன்பே பெரிய அலப்பறை... !இது, இப்போதெல்லாம் பெரியபெரிய நடிகர்கள் நடிக்கும் (பெரிய பேனர்) படங்களுக்கு ஒரு விளம்பர உத்தியோ என்று சந்தேகம் வருகிறது....
அம்மாவை உரசும் வசனங்கள்
இருப்பதாகச் சொல்லியோ
வேறு என்ன காரணம் சொல்லியோ
வெடிகுண்டு மிரட்டல்....
காவல்துறை கைவிரிப்பு....
அம்மாவை சந்திகக முயற்சி....
முயற்சி தோல்வி....
உண்ணாவிரத அறிவிப்பு....
அனுமதி மறுப்பு....
தயாரிப்பாளர் கண்ணீர்....
தயாரிப்பாளர் மயங்கி விழுந்து
மருத்துவ மனையில் அனுமதி....

எல்லாம் அடுத்தடுத்து,
விஜய் படங்களில் சுரத்தில்லாமலே வரும் கடைசி (க்ளைமேக்ஸ்) காட்சிகள் போலவே அரங்கேறின...

கடைசியில் எதிர்பார்த்தது போலவே படம் வெளிவந்து, எதிர்பார்த்தது போலவே ஒண்ணுமிலலாத கதை, உதார் நடிப்பு... படம் வழக்கம் போலவே ஊத்திக்கிச்சாச்சு!

ஒன்றை எத்தனைபேர் கவனித்தீர்கள் என்று தெரியவில்லை-

பாகிஸ்தானிகள் ஐந்துபேரையாவது கொல்லவேண்டுமாம் !




                                       
ஆட்டோவுக்கு பதிலாக வரப்போகும் குவாட்ரி சைக்கிள் இதுதான்... 
 மேல்விவரம்  - http://engalblog.blogspot.in/2013/08/blog-post_17.html
---------------------------------------------------------------------------- 

சுதந்திர தினம்: ஒரு டீயின் விலை ரூ.1 

சுதந்திர தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் ஒரு ரூபாய்க்கு ஒரு டீ வழங்கப்பட்டது. வத்தலகுண்டு காளியம்மன் கோயில் அருகே டீ கடை நடத்தி வருபவர் விராலிப்பட்டியைச் சேர்ந்த சுதந்திர பாண்டி. இவர், ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று தனது கடையில் ஒரு ரூபாய்க்கு ஒரு டீ விற்று வருகிறார்.
 இந்தாண்டும் அதேபோல் ஒரு ரூபாய்க்கு ஒரு டீ விற்பனையை காலை முதல் இரவு வரை நடத்தினார். ஒரு டீ விலை ரூ.10 ஆனாலும், ஆண்டுதோறும் சுதந்திர தினத்தில் மட்டும் 1 ரூபாய்க்கு விற்பேன் என்றார் சுதந்திர பாண்டி.
--------------- நன்றி தினமணி, 18-08-2013 --------------

பாகிஸ்தானிகள் ஐந்துபேரையாவது கொல்லவேண்டுமாம் !
     எல்லைதாண்டிய பயங்கரவாதம் அடிக்கடி நடக்கத்தான் செய்கிறது! ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்பதால், ஆத்திரத்தைக் கிளப்பி நம்மை அழிவுக்கு அழைக்கும் சில அவசரக்குடுக்கைகள் பாகிஸ்தானில் இருக்கிறார்கள். இவர்களின் பங்காளிகள் இந்தியாவிலும் இருக்கிறாரகள்... பாருங்களேன் யோகா குரு பாபா ராம்தேவ் உடனே அருளிய திருவாசகங்கள் தான் மேலே தலைப்புச்செயதியாகியிருக்கிறது.
இதைச் சரியாக அணுகிய செய்தித்தாள் தலையங்கம் மிகவும் பொறுப்பானது. இதோ-
உலகிலேயே எல்லையை காக்க அதிக பணம் செலவழிக்கும் நாடுகள் என்று பார்த்தால் அது இந்தியா, பாகிஸ்தான் நாடுகளாகத்தான் இருக்கும். இருநாடுகளும் உலகில் வளர்ந்து வரும் நாடுகளாகும். பொருளாதார ரீதியாக இன்னும் பலமடங்கு வளரவேண்டிய நாடு களாகும். ஆனால் தேவையில்லாமல் கோடிக் கணக்கான ரூபாயை எல்லைப்பாதுகாப்புக்காக செலவழித்து வருகின்றன. 

காரணம் 1947 ல் ஏற்பட்ட பிரிவினைக்குப் பின்னர் இரு நாடுகளும் பகைமை நாடுகளாக மாற்றப்பட்டன. இருப்பினும் 2008 ஆம் ஆண்டு முதல் இருதரப்பிலும் மேற்கொள்ளப்பட்ட நம்பிக் கையூட்டும் நடவடிக்கைகளால் எல்.ஓ.சி எனப் படும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப்பகுதியில் சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. இதனால்இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் வலுவடைந்து எல்லைப்புறச் சாலைகள் திறக்கப்பட்டன. 

இந்தியாவில் விளையும் காய்கறிகளும் பழங் களும் பாகிஸ்தானுக்கு சென்றன. இதனால் ஜம்மு- காஷ்மீர், பஞ்சாப், உள்ளிட்ட மாநில விவசாயிகள் பயனடைந்தனர். பாகிஸ்தானி லிருந்து உலர் பழங்களும் இதர பொருட்களும் இந்தியாவுக்கு வந்தன. வெறும் பழங்கள் மட்டும் வரவில்லை. இருநாட்டு மக்களின் அன்பும் அதில் கலந்திருந்தது.

இதன் தொடர்ச்சியாக இருநாடுகளில் இருந் தும் வர்த்தகக் குழுக்கள் பரஸ்பரம் சந்தித்துப் பேசுவதும் வர்த்தகத்தின்அளவை அதிகரிப் பதும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்தது. மேலும் சண்டை நிறுத்தத்திற்கு பிறகு எல்லைக் கட்டுப்பாட்டுக்கோட்டுப்பகுதியில் ஊடுருவல் குறைந்ததோடு, மோதல்களும் குறைந்து வந்தன. மும்பைத் தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு ரத்து செய்யப்பட்டிருந்த இருநாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான போட்டிகளும் கடந்த மாதம் நடந்தது. பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு மூத்த குடிமக்கள் விசா இல்லா மல் சென்றுவர ஒப்பந்தம் கையெழுத்தாகியது.

இப்படி இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் சுமூகமாக சென்று கொண்டிருந்த போது, கடந்த சில நாட்களுக்கு முன்னர் எல் லைக் கட்டுப்பாட்டு கோட்டுப்பகுதியில் இந் திய ராணுவ வீரர்கள்இருவர் கொடூரமான முறை யில்கழுத்தறுக்கப்பட்டு கொல்லப் பட்டது உறவில் சிக்கலை ஏற்படுத்தியது. இதனால் பதிலுக்கு பத்து பாகிஸ்தான் ராணுவவீரர்களின் தலையை அறுக்க வேண்டும் என்றும் எல்லை தாண்டிச் சென்று இந்தியா தாக்குதல் தொடுக்க வேண்டும் என்றும் இனியும் பொறுமையாக இருக்க முடி யாது என்றும் சிலர் பேசுவது நிலையை மேலும் சிக்கலாக்கிவிடும்.

சமீபத்திய பதற்றத்திற்கு பிறகு பாகிஸ்தான் தரப்பில் இருந்து பேச்சுவார்த்தைக் கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதை இந் தியா ஏற்று பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். விசா விதி முறைகளை தளர்த்துவதில் இருந்து பின் வாங்கக்கூடாது, பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியினர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி யில் பங்கேற்க இந்தியா வர அனுமதிக்கப்பட வேண்டும், திருப்பி அனுப்பப்பட்ட பாகிஸ்தான் ஹாக்கிவீரர்களை மீண்டும்அழைக்கவேண்டும், விளையாட்டு, கலாச்சாரம், வர்த்தகம் ஆகிய துறைகள் மூலமாக இரு நாடுகளின் மக்களிடை யே நம்பிக்கையை வளர்க்க முடியும். இது ஒன் றே இரு நாடுகளுக்கு இடையே அமைதி ஏற்பட வும் சுமூகமான உறவு தழைக்கவும் வழிவகுக் கும். அதை விட்டு சில சுயநல சக்திகளின் நிர்ப் பந்தத்திற்கு அடிபணிந்து மத்திய அரசு தனது நீண்டகால கொள்கைகளில் இருந்து பின் வாங்கினால் யாருக்கும் பயனில்லை.                      
-- நன்றி –தீக்கதிர்,17-08-2013 http://www.theekkathir.in/index.asp
---------------------------------------
இந்த வார வலைப்பக்கம் – 
பெரம்பலூரில் இருந்துகொண்டு, திருச்சியில் முதுகலை ஆங்கில ஆசிரியராகப பணியாற்றிக்கொண்டு, வலைப்பக்கமும் எழுதிக்கொண்டிருக்கும் கவிஞரும் எழுத்தாளரும் ஆற்றல் மிகுந்த பேச்சாளருமான எனது நண்பன் இரா.எடவின் அவர்களின வலைப்பக்கம (வயதில் எனக்கு இளையவர் என்பதாலும் (?), அன்பின் காரணமாகவும் என்னை அண்ணா என்று இவர அழைத்தாலும இணையத்தில் எனக்கு இவர் மூத்த மூத்த அண்ணாங்கோ...!) – அவரது வலைப்பக்கத்தை நம நண்பர்கள் அவசியம பார்க்கணும்
------------------------------------------------------
இரண்டு தகவல்கள் -
        அடுத்த ஞாயிற்றுக் கிழமை (செப்டம்பர் 1ஆம் தேதி) தமிழ்ப்பதிவர் திருவிழா சென்னையில நடக்கிறது. சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் நண்பர்கள் அதில் கலந்துகொள்ள வேண்டுகிறேன். விருப்பமுளளவரகள் நண்பர் முரளிதரன் அவர்களைத் தொடரபு கொள்ள வேண்டுகிறேன் - tnmdharanaeeo@gmail.com  
அவரது வலைபபக்கம் பார்த்தும தெரிநது கொள்ளலாம் - http://tnmurali.blogspot.com/

        நானும் கலந்துகொள்வதாகத்தான் இருந்தேன்.ஆனால் அதே தேதியில் திண்டுக்கல்லில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்தும் கவிதைப் பயிற்சிமுகாமில் நானும் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி அவரகளும் கலந்துகொள்ளவேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள் நண்பர ஆர.எஸ்.மணி மற்றும் பேராசிரியர் குருவம்மாள் இருவரும். அங்கு வரவிருப்பமுள்ளவரகள் (அந்தப் பக்கம் உள்ளவரகள) திரு ஆர்.எஸ மணியைத் தொடர்புகொள்க - 9442405969

-------------------------------------------------
இந்தவாரக் கவிதை –

பாடிப் பிழைப்பவன்
‘‘உன்னை அறிநதால் – நீ உன்னை அறிநதால் உலகத்தில போராடலாம்
உயர்ந்தாலும தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்’’-
சாலை ஓரத்தில் துண்டுவிரித்துப்
பாடிக்கொண்டிருந்தான்,
கை கால் கண்ணெல்லாம்
நன்றாகவே இருந்த
பிச்சைக்காரன்
– நா.முத்துநிலவன்
(நாமும் அப்பப்பக் கவித கிவித எழுதலன்னா... நம்மல முன்னாள் கவிஞன்னு சொல்ல அலையுது ஒரு கூட்டம்... என்னா பண்றது...? வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா...! அதுக்காக வாராவாரம் நானே எழுதப்போறதா யாரும் வதநதியக் கிளப்பிறாதீங்க, நல்ல சிறிய கவிதை ஒவ்வொன்றை அறிமுகப்படுத்த ஆசை...)
--------------------- --------------------------அடுத்த வாரம் பார்ப்போமா?

-------------------------------------------