வியாழன், 8 ஜூன், 2017

கருப்புச்சட்டை! சிவப்புச்சட்டை!! நீலச்சட்டை!!!


கவிஞர் சோலச்சியின்
“கருப்புச்சட்டையும்
கத்திக் கம்புகளும்”
சிறுகதை நூல் வெளியீடு

புதுக்கோட்டை-[_ன்,8 புதுக்கோட்டை அருகிலுள்ள வயலோகம் துர்க்கா அரங்கில் நடைபெற்ற கவிஞர் சோலச்சியின் “கருப்புச் சட்டையும் கத்திக் கம்புகளும்” நூலை வெளியிட்டுப் பேசிய கவிஞர் நா.முத்துநிலவன், “படித்தவர்கள் வெறும் பார்வையாளராகவே இருந்துவிடாமல், நாட்டில் நடந்துவரும் நல்லனவற்றின் பங்கேற்பா ளராகவும் வரவேண்டும்”என்றார்.
நூல் வெளியீட்டுவிழாவிற்கு மருத்துவர் அழகேசன் தலைமை யேற்றார். கவிஞர் சோலச்சியின் மூன்றாவது நூல் மற்றும் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான “கருப்புச் சட்டையும் கத்திக் கம்புகளும்” நூலைக் கவிஞர் நா.முத்துநிலவன் வெளியிட, முதல்பிரதியைக் கவிஞர் மு.கீதா பெற்றுக் கொண்டு வாழ்த்தினார். 
இரண்டாவது பிரதியை எழுத்தாளர் ராசி.பன்னீர் செல்வம் வெளியிட்டு வாழ்த்த, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச்செயலர் கு.கணேசன் பெற்றுக்கொண்டு வாழ்த்திப் பேசினார்.
நூலைவெளியிட்ட கவிஞர் நா.முத்துநிலவன் பேசும்போது, “கருப்புச் சட்டையுடன் சிவப்புச்சட்டை, நீலச்சட்டைகளும் இணைந்துதான் இப்போது கத்திக்கம்புகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தமிழின் முதல் சிறுகதை எனப்படும் வ.வே.சு.அய்யரின் குளத்தங்கரை அரசமரம் ஏராளமான விழுதுகளை விட்டு வளர்ந்திருக்கிறது. ஆலமரம்தான் விழுதுவிடும் என்பது அறிவியல். அரசமரமும் விழுதுவிடும் என்பது தமிழ்ச்சிறுகதை சொல்லும் அபூர்வ வரலாறு! பின்னர் வந்த புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் கந்தர்வன், பிரபஞ்சனின் முழுத் தொகுப்புகள் வந்துள்ளன. இன்னும் எழுத வேண்டிய கதைக்களங்கள் நம்முன்னே விரிந்தவாறு உள்ளன. சிறுகதைகளில் சிகரத்தைத் தொட்ட ஜெயகாந்தன், பின்னர் குறுநாவல் மற்றும் நாவல்களில் அந்தச் சிகரத்தை விட்டுக் கீழிறங்கியதையும் 
தமிழ்ப் படைப்புலகம் பார்த்திருக்கிறது. 
கதைகளை அரசியல் மற்றும் சமூக ரீதியாகப் புரிந்துகொள்ளப் படித்துக்கொண்டே எழுதிவர வேண்டிய அவசியமுள்ளது. சோலச்சி மிகஅருமையான கதைக்கருக்களை எடுத்துக் கதைகளை எழுதியிருக்கிறார் இரண்டாவது தொகுப்பிலும் ஈரம் காய்ந்துவிடாமல் எழுதிவருகிறார். திரைக்கலைஞர் பாரதிராஜாவும் சிறுகதை எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமியும் படம்பிடித்த தமிழகக் கிராமங்களின் உண்மையான பிரச்சினைகளைத் தொட்டு எழுதிவரும் சோலச்சி எழுத்தில் வளர வாழ்த்துகிறேன்” என்று பேசியதோடு, நூலாசிரியர் மற்றும் அவரது தந்தையாருக்கு சால்வையணிவித்துச் சிறப்புச் செய்தார்.
விழாவில், ஊடகர் ம.மு.கண்ணன், எழுத்தாளர்கள்  அண்டனூர் சுரா, மிடறு முருகதாஸ், கவிஞர்கள் ஸ்டாலின் சரவணன், சச்சின் சிவா, மீரா.செல்வக்குமார், ஸ்ரீமலையப்பன், தென்றல்சாய் மற்றும் நூலை வெளியிட்டுத் தந்த பதிப்பாளர் நந்தவனம் சந்திரசேகரனுடன், ஆசிரியர் சங்கங்களின் தலைவர்கள் ஜோசப் பன்னீர்செல்வம் (தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி), நாகராஜன்(ஆசிரியர் மன்றம்), செல்லத்துரை (தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி), ரவிச்சந்திரன் (ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி) ஆகியோரும் வாழ்த்திப் பேசினார்கள்.
கவிஞர் வெள்ளைச் சாமி தொகுத்துவழங்கினார். முன்னதாக கவிஞர் தீரா வரவேற்க, நன்றி மற்றும் ஏற்புரையைக் கவிஞர் சோலச்சி வழங்கினார். நிகழ்ச்சியை வீதி கலை-இலக்கிய நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
------------------------------------------------------------------------
செய்தி வெளியீட்டுக்கு நன்றி

புதுகை வரலாறு, தீக்கதிர், தினமணி 
  நாளிதழ்கள் 08-6-2017

வெள்ளி, 2 ஜூன், 2017

நவகவியின் பாட்டிசைப் பெருவெள்ளம்!
வாழ்நாள் முழுதும் மறக்கமுடியாமல், கேட்கும் போதெல்லாம் பரவசப்படுத்தும்  அல்லது அவஸ்தைப் படுத்தும் பாடல்கள் சில எல்லாருக்கும் இருக்கும்தானே? அப்படியானவை, கண்ணதாசன், பட்டுக்கோட்டையார் எழுதிய பாடல் மட்டுமல்ல! நவகவியின் பாடல்களும்தான் என்பதைக் கம்பீரமாய்ச் சொல்ல வந்திருக்கும் பாடல் தொகுப்பு ”நவகவி1000”!இலைகள் அழுத ஒரு மழை இரவு,
     எலும்பும் உறைந்துவிடும் குளிர்பொழுது
  கண்டேன் ஒரு காட்சி, கண்டெனது
    கண்ணில் இறங்கிவரும் நீர்விழுது
இந்த வரிகளை 25வருடமுன்பே முதன்முதலாகக் கரிசல் கிருஷ்ணசாமியின் காந்தக் குரலில் கேட்டபோது ஏற்பட்ட உணர்வு இப்போதும் மாறாதிருக்கிறது!

Google+ Followers

Related Posts Plugin for WordPress, Blogger...