கருப்புச்சட்டை! சிவப்புச்சட்டை!! நீலச்சட்டை!!!


கவிஞர் சோலச்சியின்
“கருப்புச்சட்டையும்
கத்திக் கம்புகளும்”
சிறுகதை நூல் வெளியீடு

புதுக்கோட்டை-[_ன்,8 புதுக்கோட்டை அருகிலுள்ள வயலோகம் துர்க்கா அரங்கில் நடைபெற்ற கவிஞர் சோலச்சியின் “கருப்புச் சட்டையும் கத்திக் கம்புகளும்” நூலை வெளியிட்டுப் பேசிய கவிஞர் நா.முத்துநிலவன், “படித்தவர்கள் வெறும் பார்வையாளராகவே இருந்துவிடாமல், நாட்டில் நடந்துவரும் நல்லனவற்றின் பங்கேற்பா ளராகவும் வரவேண்டும்”என்றார்.
நூல் வெளியீட்டுவிழாவிற்கு மருத்துவர் அழகேசன் தலைமை யேற்றார். கவிஞர் சோலச்சியின் மூன்றாவது நூல் மற்றும் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான “கருப்புச் சட்டையும் கத்திக் கம்புகளும்” நூலைக் கவிஞர் நா.முத்துநிலவன் வெளியிட, முதல்பிரதியைக் கவிஞர் மு.கீதா பெற்றுக் கொண்டு வாழ்த்தினார். 
இரண்டாவது பிரதியை எழுத்தாளர் ராசி.பன்னீர் செல்வம் வெளியிட்டு வாழ்த்த, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச்செயலர் கு.கணேசன் பெற்றுக்கொண்டு வாழ்த்திப் பேசினார்.
நூலைவெளியிட்ட கவிஞர் நா.முத்துநிலவன் பேசும்போது, “கருப்புச் சட்டையுடன் சிவப்புச்சட்டை, நீலச்சட்டைகளும் இணைந்துதான் இப்போது கத்திக்கம்புகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தமிழின் முதல் சிறுகதை எனப்படும் வ.வே.சு.அய்யரின் குளத்தங்கரை அரசமரம் ஏராளமான விழுதுகளை விட்டு வளர்ந்திருக்கிறது. ஆலமரம்தான் விழுதுவிடும் என்பது அறிவியல். அரசமரமும் விழுதுவிடும் என்பது தமிழ்ச்சிறுகதை சொல்லும் அபூர்வ வரலாறு! பின்னர் வந்த புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் கந்தர்வன், பிரபஞ்சனின் முழுத் தொகுப்புகள் வந்துள்ளன. இன்னும் எழுத வேண்டிய கதைக்களங்கள் நம்முன்னே விரிந்தவாறு உள்ளன. சிறுகதைகளில் சிகரத்தைத் தொட்ட ஜெயகாந்தன், பின்னர் குறுநாவல் மற்றும் நாவல்களில் அந்தச் சிகரத்தை விட்டுக் கீழிறங்கியதையும் 
தமிழ்ப் படைப்புலகம் பார்த்திருக்கிறது. 
கதைகளை அரசியல் மற்றும் சமூக ரீதியாகப் புரிந்துகொள்ளப் படித்துக்கொண்டே எழுதிவர வேண்டிய அவசியமுள்ளது. சோலச்சி மிகஅருமையான கதைக்கருக்களை எடுத்துக் கதைகளை எழுதியிருக்கிறார் இரண்டாவது தொகுப்பிலும் ஈரம் காய்ந்துவிடாமல் எழுதிவருகிறார். திரைக்கலைஞர் பாரதிராஜாவும் சிறுகதை எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமியும் படம்பிடித்த தமிழகக் கிராமங்களின் உண்மையான பிரச்சினைகளைத் தொட்டு எழுதிவரும் சோலச்சி எழுத்தில் வளர வாழ்த்துகிறேன்” என்று பேசியதோடு, நூலாசிரியர் மற்றும் அவரது தந்தையாருக்கு சால்வையணிவித்துச் சிறப்புச் செய்தார்.
விழாவில், ஊடகர் ம.மு.கண்ணன், எழுத்தாளர்கள்  அண்டனூர் சுரா, மிடறு முருகதாஸ், கவிஞர்கள் ஸ்டாலின் சரவணன், சச்சின் சிவா, மீரா.செல்வக்குமார், ஸ்ரீமலையப்பன், தென்றல்சாய் மற்றும் நூலை வெளியிட்டுத் தந்த பதிப்பாளர் நந்தவனம் சந்திரசேகரனுடன், ஆசிரியர் சங்கங்களின் தலைவர்கள் ஜோசப் பன்னீர்செல்வம் (தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி), நாகராஜன்(ஆசிரியர் மன்றம்), செல்லத்துரை (தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி), ரவிச்சந்திரன் (ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி) ஆகியோரும் வாழ்த்திப் பேசினார்கள்.
கவிஞர் வெள்ளைச் சாமி தொகுத்துவழங்கினார். முன்னதாக கவிஞர் தீரா வரவேற்க, நன்றி மற்றும் ஏற்புரையைக் கவிஞர் சோலச்சி வழங்கினார். நிகழ்ச்சியை வீதி கலை-இலக்கிய நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
------------------------------------------------------------------------
செய்தி வெளியீட்டுக்கு நன்றி

புதுகை வரலாறு, தீக்கதிர், தினமணி 
  நாளிதழ்கள் 08-6-2017

15 கருத்துகள்:

  1. ஆழமான உங்கள் பேச்சை கேட்க நேரம் தர வில்லை. சூழ்நிலை....அண்ணா...இருந்தாலும் மகிழ்வான விழா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இலக்கிய வாசம் இல்லாத எம் ஊரில் வாசத்தை எம்மக்கள் கொஞ்சமாவது உணர வேண்டும் என்பதற்கான நிகழ்வுதானே தாயே. நம் உறவுகள் வருகையால் மகிழ்ந்து வான் மழையும் நம்மோடு இணைந்து விட்டது. எல்லோரும் வந்ததில் பெரும் மகிழ்ச்சி தாயே எம்முள்.

      நீக்கு
  2. இனிய நண்பர் சோலச்சி அவர்களுக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  3. நண்பர் சோலச்சிக்கு வாழ்த்துக்கள் ஐயா

    பதிலளிநீக்கு
  4. வீதி அமைப்பிற்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்

    பதிலளிநீக்கு
  5. மூன்றாவது நூல் வெளியீடு - சோலச்சி அவர்களுக்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்.....

    பதிலளிநீக்கு
  6. சோலாச்சி ஐயாவுக்கு வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  7. கவிஞர் திரு. சோலச்சி அவர்களுக்கு எமது வாழ்த்துகளும்... - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  8. அய்யா அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கின்றேன்

    பதிலளிநீக்கு
  9. எழுத்தாளர் சோலோச்சி அவர்களுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  10. சோலச்சிக்கு வாழ்த்துகள்.
    சிறுகதைகளை ஆழ்ந்து நோக்கி,
    அருமையாக நூலாய்வுச் சொற்பொழிவாற்றிய தங்களுக்குப் பாராட்டுகள் ஐயா.

    பதிலளிநீக்கு
  11. நண்பர் சோலச்சிக்குப் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  12. நண்பர் சோலச்சி அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள். மென்மேலும் சிகரம் தொட வாழ்த்துகள். செய்தியைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள் ஐயா.

    பதிலளிநீக்கு
  13. நூலாசிரியருக்கு மனம் நிறைந்த பாராட்டுகள். நிகழ்வுகளைப் பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு