புரட்சியின் நூற்றாண்டு!

உலகை அழிவிலிருந்து காப்பாற்றிய சோவியத்துப் புரட்சியின் நூற்றாண்டு!

மார்க்சியத்தை நடைமுறைப்படுத்திய
உண்மையான புரட்சித் தலைவர்
தோழர் வி.இ.லெனின்

மார்க்சியத்தை மட்டுமல்ல, உலகையும்
அழிவிலிருந்து காத்த
”பாட்டாளிவர்க்க சர்வாதிகாரி”
தோழர் ஸ்டாலின்

உலகை மாற்றிய மாபெரும்
சிந்தனையாளர் தோழர் கார்ல் மார்க்ஸ்

மார்க்சுக்குச் சற்றும் குறையாத சிந்தனையாளரும்
உற்ற தோழராக மார்க்சிய நூல்களை
வெளிக்கொண்டுவந்தவருமான
தோழர் ஃப்ரெட்ரிக் ஏங்கெல்ஸ்
மனிதகுல வரலாற்றில் மிகப்பெரிய நம்பிக்கையைத் தந்த “புரட்சி” எனும் சொல்லைத் தமிழில் தந்தவன் மகாகவி பாரதி! இந்தச் சொல்லை மட்டுமின்றி, “பொதுவுடைமை” எனும் சொல்லையும் தமிழில் தந்தவன் அவனே! இதற்குக் காரணமான பொதுவுடைமைப் புரட்சிக்கு வயது 100.
      அப்போதைய நாட்காட்டிப்படி அக்டோபர்-25 (பின்னர் திருத்தப்பட்ட நாட்காட்டியின்படி நவம்பர்-7ஆம் தேதி) அந்தப் புரட்சி வெற்றிபெற்றது!
      இதனை, ருஷ்யப் புரட்சிக் கவிஞன் மாயக்காவ்ஸ்கியின் கவிதையை மொழிபெயர்த்த, தொ.மு.சி.ரகுநாதன் தன் பாணியில்,
      “என்வாழ்வில் நான்கண்டு நானே அனுபவித்த
      அவ்வளவு நாட்களையும் அலசிப் பார்த்தெனது
      வாழ்வில் மிகமிகவும் மகத்தான நாளெதென்று
      ஆழ்ந்தே நோக்குங்கால் ஐயமின்றித் திரிபின்றி
      அக்டோபர் இருபத்தி ஐந்தாம்நாள் ஒன்றேதான்
      என்றேநான் உளமார உரைத்திடுவேன்” என்கிறார்!

இரண்டாம் உலகப்போரில், உலகைக் காப்பாற்றிய நாடு!    
செப்டம்பர்1,1939இல் போலந்தை ஹிட்லர் பிடித்ததில் தொடங்கியது இரண்டாம் உலகப்போர்! நாசிச ஜெர்மனும், பாசிச இத்தாலியும் இணைந்த அச்சுக்கூட்டணி ஒருபுறம். இங்கிலாந்தும் ஃபிரான்சுமான நேசக்கூட்டணி மறுபுறம்! இங்கிலாந்து தவிர்த்த மேற்குஐரோப்பா முழுவதையும் பிடித்துவிட்ட அச்சுக் கூட்டணி, சோவித்து நாட்டை நோக்கி வந்ததால் சோவியத்து நாடு, நேசநாடுகளின் அணியில் இணைந்து போரிட நேர்ந்தது!
ஏற்கெனவே சீனநாட்டுப் பகுதிகள் சிலவற்றைப் பிடித்திருந்த ஜப்பான், அமெரிக்காவைத் தாக்கி அச்சுக் கூட்டணியில் இணைந்தது. எனவே, அதுவரை ஆயுத விற்பனையை மட்டுமே செய்துவந்த அமெரிக்கா வேறு வழியின்றி நேசநாடுகளுடன் நேரடியாக இணைந்தது.
சோவியத்துப் புரட்சியை நேரடியாகப் பார்த்து, “உலகைக் குலுக்கிய பத்துநாள்கள்” நூலை எழுதிய ஜான்ரீட் சொன்னது போல, உலகமக்களின் மீது திணிக்கப்பட்ட “வணிகர்களின் யுத்தம்” என்பதே உண்மையானது! அந்த யுத்தத்தை முறியடித்து உலகைக் காத்த பெருமை சோவியத்துக்கு உண்டு!
 சோவியத்துச் செஞ்சேனை  ஜெர்மன் படையை மாஸ்கோவின் முன் தடுத்து நிறுத்தியதோடு, ஜெர்மன் படையைக் கிழக்கு ஐரோப்பா வழியாகத் துரத்தி பெர்லின் வரை போக, ஜெர்மன் படை  சரண் அடைந்தது.
ஸ்டாலின் கிராட் முற்றுகை 182 நாட்கள்! லெனின் கிராட் முற்றுகை இரண்டரை ஆண்டுகள்!  எனினும் சோவியத்து மக்கள் காட்டிய உறுதியும் தியாகமும் உலகையே வியக்க வைத்தது. பாசிச அபாயத்திலிருந்து இப் பூவுலகைக் காப்பாற்ற 2கோடி மக்களை சோவியத்து நாடு பலிகொடுத்தது!        5கோடி மக்கள் படுகாயமடைந்தனர்! போர்க் கைதிகளாக இறந்துபோனோர் மட்டும் 33லட்சம்பேர்! 1,700நகரங்கள் 27,000கிராமங்கள் அழிக்கப்பட்டன! 38,500 மைல் ரயில்வே பாதைகள் நொறுக்கப்பட்டன! வாழ்வாதாரங்கள் அனைத்தும் இழந்த பரிதாபநிலையில் சோவியத்து மக்கள்! போரில் ஈடுபட்ட வேறெந்த நாட்டுக்கும் இவ்வளவு பேரழிவு நிகழவில்லை!
எனினும் தம் நாட்டைக் காப்பதும் உலகைக் காப்பதுமான இரட்டைப் பணிகளை ஏற்றுச் சுமந்த சோவியத்துச் செஞ்சேனை, உறுதியான வெற்றியைப் பெற்ற பின்னரே ஓய்ந்தது! வரலாற்றில் நிலைத்த வெற்றி!
பேயாட்டம் போட்ட சர்வாதிகாரிகளான முசோலினி சுட்டுக் கொல்லப்பட்டான்! ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டான்! ஆயினும் யுத்தம் முடிவுக்கு வரும் நேரத்தில், ஜப்பான்மீது அணுகுண்டு வீசி தனது மேலாதிக்கத்தைக் காட்டிக் கொண்டது அமெரிக்கா! அக்கிரமப் பேரழிவு!  
      கிழக்கு ஜெர்மனி, போலந்து, செக்கோஸ்லோவாகியா, பல்கேரியா, யூகோஸ் லோவாக்கியா, ஹங்கேரி, ருமேனியா, அல்பேனியா என  கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஒவ்வொன்றாய்ச் சோசலிச முகாமில் இணைந்தன. அப்போது ஐரோப்பாவின் மக்கள் தொகை சற்றேறக்குறைய அறுபது கோடி; அதில் சரிபாதி முப்பது கோடி இப்படிச் சிவப்பானது!  இது இரண்டாம் உலகப்போரில் சோவியத்து நாடு ஆற்றிய அர்ப்பணிப்பு மிக்க பங்கேற்பிற்குத் தானாகப் பழுத்துக் கிடைத்த செங்கனிகள்!
எஸ்தோனியா, லாட்வியா, லிதுவேனியா போன்ற நாடுகள் சோவியத்து ஒன்றியத்தில் இணைந்தன. பிரான்சு, இத்தாலியில் கூட்டணி ஆட்சிகள் மலர்ந்தன. கம்யூனிஸ்டுகள் பலமும் முன்பைவிட அதிகரித்தது.  
யுத்தத்திற்கு முன்னதாக சோவியத் யூனியனிலிருந்த இருபது கோடி மக்கள் சோசலிசத்தை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருந்தார்களெனில் யுத்தத்திற்கு பிந்தைய ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை தொண்ணூறு கோடியாகஅன்றைய உலகின் மூன்றிலொரு பங்காக - மாறியது. இதுதான் ஏகாதிபத்தியப் பெருமுதலாளிகளின் கண்களை உறுத்தத் தொடங்கியது!
மாபெரும் மக்கள் சீனப் புரட்சி, மற்றும் வியட்நாமைத் தொடர்ந்து, ஜப்பானின் அச்சுறுத்தலையும் அமெரிக்கத் தாக்குதலையும் மீறி, கொரிய ஜனநாயக குடியரசு (வடகொரியா) நிமிர்ந்து நின்றது, இன்றும் நிற்கிறது.! அமெரிக்காவின் காலடியில் பாடிஸ்டா என்ற கொடுங்கோலன் ஆட்சியில் தவித்துக் கொண்டிருந்த கியூபா மக்கள் விடிவுகாண சோசலிச வழியினைத் தேர்ந்தெடுத்து காஸ்ட்ரோ தலைமையில் வீறு கொண்டு எழுந்தார்கள்.
 “சோசலிசம்தான் வளர்ந்து வரும் கோட்பாடு, முதலாளித்துவ அமைப்புக்கு சரியான மாற்று சோசலிசமே” என்பதை எடுத்துக்காட்டி சீனா, கொரியா, வியட்நாம், கியூபா நாடுகளில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்கள் பெருமுதலாளிகளின் கண்களில் விழுந்த சிறுமணலாய் உறுத்தின!
சோவியத்துக்கு இவ்வளவு வலிமை எங்கிருந்து வந்தது?     ஏற்கெனவே புரட்சிப் போரில் பெரும் இழப்பைச் சந்தித்திருந்த சோவியத்து  எனும் ஒருநாடு, புரட்சியால் 15நாடுகள் ஒன்றிணைந்த பெருநாடு! இதை இணைத்ததுதான் சோவியத்துப் புரட்சி எனும் மாபெரும் மக்கள் சக்தி! அந்த வரலாற்றையும் சேர்த்துப் பார்த்தால்தான் மார்க்சியத் தத்துவத்தை நடைமுறையாக்கிய லெனின்-ஸ்டாலின் தலைமையின் வலிமை புரியும்!
லகின் மிகவும் பின்தங்கிய நாடுகளில் ஒன்றான ருஷ்யா, 1917 புரட்சிக்குப்பின் உலகின் மிக முன்னேறிய நாடுகளில் ஒன்றாக மாறியது! விவசாயம், தொழில், கல்வி, மருத்துவம், அறிவியல்-தொழில்நுட்பம், இளைஞர்நலம், பெண்கள்-குழந்தைகள் முன்னேற்றம் என அனைத்துத் துறைகளிலும் மிகப்பெரும் வளர்ச்சிகண்டது! உலகே வியந்து போனது!
ஐரேப்பாவில் தொழிற்புரட்சிக்குப் பின்னர் உருவான முதலாளித்துவ நாடுகள், வளர்ச்சிக்குக் காரணமான தொழிலாளர்களை எப்படியெல்லாம் கொடுமையாகச் சுரண்டின என்பதை விளக்க வார்த்தைகளில்லை! சுமார் 11மணிநேரம் உழைத்தும், உழைத்தவன் வறுமை போகவில்லை! காரணம் அவனது உழைப்பு உபரியாக முதலாளியிடம் போய்க் கொண்டிருந்தது!
வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் வளமிகுந்த நாடாக இன்றும் பேசப்படும் அமெரிக்காவின் ஒளிவெள்ளத்தின் அடியிருளில், உழைப்பவர் பலர் வறுமையில் உள்ளனர்! ஆனால், “உழைப்புக்கேற்ற வருமானம் உழைப்பாளிக்கே கிடைக்கச் செய்து அவர் வறுமையை ஒழிக்க முடியும்” என நடைமுறையில் காட்டிய முதல்நாடு சோவியத்து சோசலிச நாடுதான்!
உபரியில் கொழுக்கும் முதலாளிகள் இல்லாமல், அவற்றை உழைப்பாளிகளே பகிர்ந்து கொண்டதால் அவர்தம் வறுமை ஒழிந்தது! இதற்காகத்தானே மார்க்ஸ் “உபரிமதிப்பு” என்பதைக் கண்டு சொன்னார்?! அவரது தத்துவம் இப்படி நடைமுறையான முதல் நாடுதான் சோவியத்து!
 “தோற்றுப் போனவர்கள், தூக்கியெறிப்பட்ட சுரண்டல்காரர்கள், கபட வேட மதவாதிகள் பத்துமடங்கு வேகத்துடன் தாமிழந்த சொர்க்கத்தை மீட்கப் போராடுவார்கள்” என்று ஏற்கெனவே தோழர் லெனின் எச்சரித்திருந்தது போலவே, தோற்றவர்கள் அப்போதுதான் பிறந்த குழந்தையான சோவியத்து நாட்டை, புரட்சி நடந்த ஆறேமாதத்தில் மூர்க்கமாய்த் தாக்கினார்கள்.
உள்நாட்டுக் குழப்பவாதிகளுடன் சேர்ந்து, 14 நாடுகள் இணைந்து எதிர்த்தன! ஆனால்செஞ்சேனை அவர்களை வென்று நின்றது! எனினும், நாட்டுப் பொருளாதாரம் பெரும் அளவிற்கு அழிந்து போனதும் உண்மை!
இதற்கிடையில்தான் சோசலிச நிர்மாணப் பணிகள் நடந்திருந்தன!  சோவியத்துப் புரட்சியை ஒட்டி ஜெர்மன், ஸ்பெயின், இத்தாலி, ஆஸ்ட்ரியா முதலான நாடுகளிலும் புரட்சிகர முயற்சிகள் நடந்தாலும், அவை யாவும் நசுக்கப்பட்டன. சோவியத் யூனியன் தனித்து நின்றுதான் சோசலிசத்தைக் கட்ட வேண்டுமென்ற நிலை எழுந்தது. அதைச் சுற்றிலும் ஏகாதிபத்திய அரசுகள் வணிகத்தடை எனும் நெடுஞ்சுவரை வேறு எழுப்பிவிட்டிருந்தன!
சோவியத் வீழ்ச்சியினைப் பற்றிப் பேசுவோர், இப்படியான பொருளாதார அழிவின் மீது தான் போல்ஷ்விக் கட்சியின் தலைமையில் சோசலிசக் கட்டுமானம் தொடங்கியது என்பதைஞாபகமாக’ மறந்து போகிறார்கள்!?!
புரட்சியினை வெற்றிகரமாக நடத்திய லெனின் புதிய பொருளாதாரக் கொள்கையினை முன்வைத்தார். நாடுமுழுவதும் மின்மயமாக்கப்பட்ட கூட்டுப்பண்ணைகள் எழுந்தன!   எனினும் அவர் 1924இல் மறைந்தது உலகப் பேரிழப்பே ஆகும்! பின்னர் ஐந்தாண்டுத் திட்டம் 1928இல் ஸ்டாலினால் திட்டமிடப்பட்டது! 5ஆண்டுக்குள்ளேயே மிகப்பெரிய வெற்றி கிடைத்தது! பல பத்தாண்டுகளில் முதலாளித்துவ நாடுகள் சாதித்ததை சோவியத் நாடு, ஐந்தாண்டுக்குள்ளேயே முடித்து எழுந்து நின்று விட்டது!
ஸ்டாலின் 1933ஆம் ஆண்டு கட்சியின் மத்தியக்குழு கூட்டத்தில் பெருமையோடு சொன்னார்… “இதற்கு முன்பு இரும்பு எஃகு தொழிற்சாலை ஏதும் இல்லை, இப்போது இருக்கிறது! முன்பு ட்ராக்டர் தயாரிக்கும் ஆலை இல்லை, இப்போது இருக்கிறது! முன்பு, கார் தயாரிக்கும் தொழிற்சாலை இல்லை, இப்போது இருக்கிறது! முன்பு ரசாயனத் தொழிற்சாலை இல்லை, இப்போது இருக்கிறது…” ஆம்! இவற்றைச் சாதித்தது சோசலிச அரசு!   
இப்படி 25ஆண்டுக்காலச் சோசலிசப் பொருளாதார அடிப்படையும் புதிய சமூக அமைப்புத் தந்த நம்பிக்கையும்தான் 1940களில், இரண்டாம் உலகப்போரில் பாசிசம் தொடுத்த தாக்குதலை எதிர்கொள்ளும் பலத்தை அந்த மக்களுக்குக் கொடுத்தது என்பதை மறந்துவிடக் கூடாது!
அப்படி என்னதான் செய்திருந்தது சோவியத்துச் சோசலிசப் புரட்சி?
* மக்களின் பட்டினியை ஒழித்த முதல் நாடு!.
* இலவசக் கல்வியும் மருத்துவமும் தந்த முதல்நாடு!
* தொழிலாளர் வேலை நேரத்தை 6மணி நேரமாக்கிய முதல்நாடு! 
* தொழிலாளர்க்கு  இதர விடுமுறை அல்லாமல்,ஆண்டிற்கு
    ஒரு மாதம் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கிய முதல்நாடு!
* ஆண்களுக்கு 60 வயதும், பெண்களுக்கு 55 வயதும் ஓய்வு பெறும்    
    வயதாகவும், ஓய்வு பெறுவோர், உழைக்க   இயலாதவர்க்கு        
  ஓய்வூதியமாக முழுச்சம்பளமும் வழங்கிய முதல்நாடு!
* எல்லோருக்கும் குடியிருப்பை உறுதி செய்த முதல் நாடு!
* வாடகை, எரிபொருள், மின்சாரம், தண்ணீர் உட்பட அனைத்துக்கும் 
     சேர்த்து,ஊதியத்தில்  3 % மட்டுமே பெற்ற முதல் அரசு!
* சுமார் 40ஆண்டுக்காலம் விலைவாசி ஏறாதிருந்த நாடு!
* பெண்களுக்குப் பேறுகால விடுப்பு நான்கு மாதம் முழு ஊதியத்துடன் வழங்கியதோடு, தேவைப்படின் ஓராண்டுக் காலம் பாதி  ஊதியத்துடன் கூடிய விடுப்பும் வழங்கப்பட்டது. தாய்ப்பால் கொடுக்கும் காலம் வரைக்கும் பெண்களுக்கு வாரத்தில் 6 நாட்களோ, நாள் ஒன்றுக்கு 7மணி நேரமோ உழைக்க வேண்டிய கட்டாயமில்லை.
* எல்லாக் குழந்தைகளுக்கும் 16 வயது வரையிலும், தனித்து வாழும் பெண்கள் வளர்க்கும் குழந்தைகளுக்கு 18 வயது வரையிலும் அரசு மானியம் வழங்கிய முதல் நாடும் அந்த சோவியத்து நாடே!
* விண்வெளியில் பயணம் செய்த முதல்ஆண் யூரிககாரின், முதல்பெண் வாலெண்டினா இருவருமே சோவியத்து நாட்டவர்!
இதனை முன்னுணர்ந்துதான் நமது மகாகவி பாரதி இந்தப் புரட்சி நடந்து கொண்டிருந்தபோதே இதனை “யுகப்புரட்சி!” என்று வர்ணித்தான் போலும்!
      ந்தப் புரட்சியின் விளைவு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் எதிரொலித்தது! பல நாடுகள் காலனி ஆதிக்கத்திற்கு எதிராகவும், மற்றும் முதலாளித்துவச் சுரண்டலுக்கு எதிராகவும் திரும்பிட உத்வேகமளித்தது! 
1919 ஆகஸ்ட் 5 அன்று நடைபெற்ற ரஷ்யக் கம்யூனிஸ்டுக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் டிராட்ஸ்கி, "இந்தியா மீது படை எடுக்க வேண்டும்' - என்ற திட்டத்தை முன்வைத்தார்! இதை லெனினும், சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியும் ஏற்கவில்லை. சீனா, துருக்கி, ஈரான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இடதுசாரிகளும், கம்யூனிஸ்டுகளும் செஞ்சேனை தங்கள் நாட்டின் மீது படையெடுத்து புதிய ஆட்சியை அமைக்கவேண்டும் என்று லெனினிடம் பலமுறை வலியுறுத்தியும் அதற்கு அவர்  இணங்கவில்லை.
“புரட்சியை இறக்குமதி செய்ய முடியாது தோழர்களே! அந்தந்த நாட்டு மக்களே, நாட்டின் சூழல் அறிந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பணிதான் புரட்சி” எனத் தெளிவாகச்  சொன்னார் லெனின்
            ஸ்டாலின் ஆட்சியில் எடுத்த பல அதிரடி முடிவுகளால் முதலாளித்துவ நாடுகள் அவரை சர்வாதிகாரி என்று சொன்னாலும், அவை அந்த நாட்டுப் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமாகவே உலகப் பாட்டாளிவர்க்கம் இன்றுவரை புரிந்து கொண்டுள்ளது. ஸ்டாலினுக்குப் பின்வந்த (1950முதல் நிகிட்டா குருசேவ், 1970-முதல் பிரஷ்னேவ், 1985 தொடங்கி கொர்பச்சேவ் மற்றும் எல்த்சின் போன்றோரின்) தாராளவாதம் திருத்தல்வாதமாகி  ஒன்றியத்தின் பின்னடைவுக்குக் காரணமாயின.  
உலக முதலாளிகளும் இதை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். (இதே நேரம்தான் சோசலிசக் கிழக்கு ஜெர்மனுக்கும் முதலாளித்துவ மேற்கு ஜெர்மனுக்கும் இடையிலிருந்த “பெர்லின் சுவர்” 1990இல் இடிக்கப்பட்டு, இரண்டுநாடுகளும் ஒரே ஜெர்மனாக முதலாளித்துவ நாடாயின)
டிசம்பர் 25, 1991அன்று கொர்பச்சேவ் சோவியத் ஒன்றியத்தின் ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்து, அப்பதவியை நிர்மூலம் செய்தார். தன் பதவிகளை ரஷ்ய ஜனாதிபதி எல்த்சினுக்கு கொடுத்தார். அடுத்த நாள் `சுப்ரீம் சோவியத்` சோவியத் யூனியனின் மிக உயர்ந்த அரசுத் துறை, தன்னைத் தானே கலைத்துக் கொண்டது. உலகப்பெரும் பின்னடைவே அது!
ஆனால், சோவியத்து ஒன்றியச் சிதைவு, மார்க்சிய எதிரிகளுக்குக் கொண்டாட்டமானது! “மார்க்சியம் தோற்றது, முதலாளித்துவமே தீர்வு” என்ற கூக்குரல் பெருகியது! ஆனால் மற்ற நாடுகளின் மக்கள் முதலாளித்துவ அறிவுஜீவிகளைப் போல சோவியத்தின் சிதைவை மார்க்சியத்தின் தோல்வியாகப் பார்க்கவில்லை! மார்க்சியம் எனும் சமூக விஞ்ஞானத்தை நடைமுறைப் படுத்தியதில் நடந்த தவறாகவே பரிசீலிக்கின்றனர், விவாதம் தொடர்ந்து நடக்கிறது! “மார்க்சியத்தை நடைமுறைப்படுத்திய தவறுக்கு மாற்று முதலாளித்துவமல்ல” என்னும் குரல் இன்னும் பாட்டாளி மக்களிடம் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. சோவியத் நாட்டு மக்களே இதுபற்றிய தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் இந்த உணர்வைப் பிரதிபலித்து வருவதைக் காணலாம்.
சோவியத்துப் புரட்சி இந்தியாவிற்குத் தந்த கொடைகள்!
சோவியத்து சோசலிச நாடு,  இந்தியத் தொழில்வளர்ச்சிக்குப் பேருதவிகளைச் செய்துள்ளது, உதவியது மட்டுமல்ல; தொழிநுட்ப இரகசியங்களையும் தாராளமாக அனுமதித்தது. இந்திய சுதந்திரத்தின் பின்னர் சுமார் 25 ஆண்டுகளில் சோவியத் யூனியன் ஏராளமான தொழில்கள் மற்றும் ஆராய்ச்சி  நிறுவனங்களை  இந்தியாவில் உருவாக்க உதவியது
பிலாய், பொக்காரோவில் மாபெரும் இரும்பு எஃகு ஆலைகள், சென்னை அரக்கோணத்தில் தொடர் எஃகு ஆலை,  ராஞ்சியில் இயந்திர உற்பத்தித் தொழிற்சாலை, துர்காபூரில் சுரங்கத் தொடர்பு எந்திர ஆலை,  தமிழக நெய்வேலி அனல்மின் நிலையம்,  அரித்துவாரில் மின்எந்திர உற்பத்தி ஆலை, ரிஷிகேஷில் நச்சு முறிவு மருந்துத் தொழிற்சாலை, ஐதராபாத்தில் சேர்க்கை மருந்துத் தொழிற்சாலை, சென்னை நந்தம் பாக்கத்தில் அறுவை மருத்துவக் கருவிகள் ஆலை, துர்காபூரில் மூக்குக் கண்ணாடித் தொழிற்சாலை முதலான ஆலைகள் அமைய சோவியத் நாடு பேருதவி செய்துள்ளது. இயற்கை எரிவாயு மற்றும் பெல் (BHEL) போன்ற நிறுவனங்களும் இன்றைக்கும் இலாபகரமாகச் செயல்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் பிறகு அணுசக்தித் துறையில் இருநாடும் இணைந்திருப்பது அனைவரும் அறிந்ததே. 
இவை தவிர பண்ணைத் தொழில், கால்நடை, பெரிய அளவில் பயிர்த்தொழில், பருத்தி விளைச்சல், எண்ணெய் சுத்திகரிப்பு என ஏறத்தாழ எழுபது நவீனப் பெருந்தொழில்களையும் பெரிய எந்திர மயமான பண்ணைகளையும் அமைக்க சோவியத் நாடு நமக்கு உதவியுள்ளது.
இவ்வாறாக, பெருந்தொழில்துறை மட்டுமின்றி, விண்வெளித்துறை, பாதுகாப்புத்துறை, அணுசக்தி மற்றும் மருந்துத் துறைகளில் சோவியத்து நாட்டின் உதவிகள் இந்திய வளர்ச்சியில் இரண்டறக் கலந்து நிற்கின்றன!
இந்தியாவின் முதல் செயற்கை கோளான ஆர்யபட்டா ரஷ்யாவால் 1975ஆம் ஆண்டு விண்வெளியில் செலுத்தப்பட்டது.   ரஷ்யா செலுத்திய விண்வெளி வாகனத்தில் 1984ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் விண்வெளி வீரராக ராகேஷ் சர்மா,  பயணம் தொடங்கினார்.
பொருளியலில் மட்டுமின்றி அரசியல், தத்துவத்திலும் ...
கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும் சோவியத்து “போல்ஷ்விக்கு” (கம்யூனிஸ்டு)களின் உழைப்பை, தியாகத்தை மதித்தவர் காந்தி!  ஸ்டாலின் வெற்றிகரமாக நடத்திய  ஐந்தாண்டுத் திட்டத்தைப் பின்பற்றி சோவியத் நாட்டோடு நட்பு பாராட்டினார் இந்தியப் பிரதமர் நேரு!
லெனின்-ஸ்டாலின் காலத்து சோவியத்து நாட்டு அரசியல் பொருளாதார மாற்றங்கள், இந்தியாவில் திலகர், ஜோஷி,  எம்.என்.ராய், ஆச்சார்யா, சிங்காரவேலர், ஜீவா, ஈ.வெ.ரா.பெரியார் என அன்றைய மற்றும் பிந்திய இந்தியத் தலைவர்கள் பலரையும் ஈர்த்து அவர்களின் அரசியல் போக்கில் பற்பல மாற்றங்களைச் செய்துள்ளன! 
1920இல் லெனின் தலைமையில் நடந்த “இரண்டாம் கம்யூனிஸ்ட் இண்டர்நேஷனல்” பேரவையில் இந்தியாவிலிருந்து சென்று எம்.என்.ராய் பங்கேற்றார். இந்தியப் பொதுவுடைமை இயக்கங்களுக்கும் சோவியத் பொதுவுடைமைக் கட்சிக்கும் நல்லுறவு நீடித்தது, இன்றும் நீடிக்கிறது!    
      தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்என்று அழைக்கப்படும் சிங்கார வேலர்தான் இந்தியாவில் முதன்முதலாக மே தினவிழாவை சென்னையில் கொண்டாடினார். லெனினைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெறாமலிருந்தும் தன் எழுத்து, பணிகளின் வழியாக லெனினால் நேசிக்கப்பட்டவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் சிங்காரவேலர்.
ரஷ்யப் புரட்சியை வாழ்த்திப் பாடிய பாரதி, லெனினைப் பற்றி நிறைய கவிதைகள் தீட்டிய அம்ருதா ப்ரீதம், பிரேம்சந்த், முல்க்ராஜ்ஆனந்த், சரோஜினி நாயுடு, ஆகிய புகழ்வாய்ந்த இந்தியக் கவிஞர்களின் படைப்புகளும் சோவியத்துப் புரட்சியை வரவேற்றுப் பாடின
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும்  பல இந்திய மொழிகளிலிருந்தும்  900-க்கு மேற்பட்ட இந்திய எழுத்தாளர்களது நூல்கள் சோவியத் நாட்டில் பேசப்படும் 35 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் மொத்த பிரதிகளின் எண்ணிக்கை 3 கோடிக்கும் அதிகமாகும். உதாரணமாக, மகாபாரதம் 16 முறை 56 ஆயிரம் பிரதிகளாக அச்சாகி வெளிவந்துள்ளது. தாகூரின் நூல்கள் மட்டும் 161 முறை வெளியாகியுள்ளன.”- என்று இலக்கிய ஆய்வாளர் தொ.மு.சி. ரகுநாதன்இந்திய-சோவியத் இலக்கியப் பரிவர்த்தனைகள்என்னும் தமது கட்டுரையில் குறிப்பிடுகிறார்!
1932இல் சோவியத்து நாடு சென்றுவந்த தந்தை பெரியார் தமிழகம் வந்ததும் “தனது பாதை இனி சீர்திருத்தப் பாதையல்ல, புரட்சிப்பாதையே” என்று அறிவித்ததோடு, இயக்கத்தவர் அனைவரும் “தோழர்” என அழைக்க வேண்டினார். இக்கட்டுரையின் முதல்வரியில் நாம் தெரிவித்திருக்கும் -170ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட- “பொதுவுடைமைக் கட்சி அறிக்கை” நூலைத் தமிழில் தந்த பெருமை தந்தை பெரியாரையே சாரும்!  
பின்னர் ஏராளமான சோவியத் அரசியல், தத்துவ, இலக்கிய நூல்கள் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வந்தன. சோவியத்து நாடுசிதையும் வரை மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் இந்தப் பணியைத் தொடர்ந்து செய்துவந்தது, ருஷ்யன் உள்ளிட்ட பல்வேறு சோவியத்து மொழிகளில் இந்தியப் படைப்புகள் வந்துள்ளன. இந்திய எழுத்தாளர்கள் போற்றப்பட்டனர்  
இந்தத் தொடர்பு நேருகாலத்திலிருந்து, மோடி காலம்வரை தொடர்கிறது!
நிழலின் அருமை வெய்யிலில் தெரிகிறது!    இப்போது சோவியத்து ஒன்றியம் இருந்திருந்தால்…
இராக், ஆப்கன், பாலஸ்தீன்  லிபியா உட்பட சிலநாடுகளின் பலலட்சம் அப்பாவிகளை  காரணமும் இன்றிக் கொன்றழித்த அமெரிக்கா, உலக போலீஸ்காரனாக தன்னைக் காட்டிக் கொண்டு சர்வதேச நாடுகளை மிரட்டி வருவதைப் பார்க்கும்போதும் … மனித உரிமைகள், போர்க்குற்றம் போன்றவை குறித்து அடுத்த நாடுகளை கண்டிப்பதும், தங்கள் நாட்டிற்கு அது பொருந்தாது தாங்கள் விதிவிலக்கானவர்கள் என்பது போன்று நடந்து வருவதும்…  நிழலின் அருமை வெய்யிலில் தெரியும் என்னும் நம்நாட்டுப் பழமொழியைத்தான் நமக்கு நினைவுபடுத்துகிறது!
சோவியத்து ஒன்றியம் என்னும் ஒரு பெரும் சக்தியை இழந்த உலகம் இப்போது அமெரிக்கா உள்ளிட்ட பெரும் முதலாளித்துவ அக்கிரமங்களை என்னசெய்வதென்று அறியாமல் திகைத்து நிற்க வேண்டியிருக்கிறது!
கைகோத்து நிற்கும் கார்ப்பரேட்டுகளும் காவியும்!




எதிரிக்கு எதிரி நண்பன் எனும் சாக்கில், அமெரிக்காவும் இந்திய மத அடிப்படைவாதக் கும்பலும் இணைந்து “இந்தியாவின் கோவில்கள்” மற்றும் “நவரத்தினங்கள்” எனப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்க வெறிகொண்டு திரிகின்றனர்! கேட்டால் “ஆட்டின் வாலை வெட்டி அதற்கே சூப் வைத்த கதை”யாக பொருந்தாத கதைகளைச் சொல்கின்றனர்!
இந்தியத் தொலைக்காட்சிகளைத் திறந்தால் 
காலையில் எழுந்தது முதல் இரவில் படுக்கப் போகும்வரை 
பயன்படுத்தும் அத்தனை பொருள்களையும் 
நாங்கள்தான் தருவோம் என்று 
வரிசைகட்டி நிற்கின்றன 
அந்நிய பகாசுர கார்ப்பரேட்டுகள்!
இந்தப் பன்னாட்டுப் பகாசுரக் கம்பெனிகளின் லாப வேட்டைக்கு இந்தியச் சிறுதொழில்கள் அனைத்தும் அழிக்கப்படுகின்றன. இயற்கை வளங்களை எந்தக் கேள்வியுமின்றித் தனியார் சுரண்டிக்கொள்ளவே கவர்ச்சிகரமான திட்டங்கள் தினந்தோறும் அறிவிப்பாக வருகின்றன! இவற்றை எதிர்த்து, படித்தவர் எழுந்து விடாதவாறு கல்வியும் மழுங்கடிக்கப்பட்டு வருகிறது! தாய்மொழிக்கல்வி தள்ளாடுகிறது! படிக்காதவர்களுக்காக இருக்கவே இருக்கிறது பக்தி-ஆன்மீகப் படங்களும் தொலைக்காட்சியின் தொடர்மந்திரக் கதைகளும்! என்னே பாசவலைவீச்சு!  
இந்தியா தனியார்மயத்தை நோக்கித் தலைவிரி கோலமாக ஓடிக்கொண்டு இருக்கிறது! “செம்மையெலாம் பாழாகிக் கொடுமையே அறமாகத் திகழும்..” அரசியல்-பொருளியல் சூழலில், ஏழை உழைப்பாளிக்கு வாழ்க்கையே கொடுமையாகி வருகிறது!
சோவியத்து உழைப்பாளி வர்க்கம் வீறுகொண்டு எழுந்ததை,  “ஆகாவென்று எழுந்தது பார் யுகப்புரட்சி!” என்று பாரதி பாடியதுபோல நம்நாட்டிலும் அது நடக்கவேண்டிய தேவை, நம்மை விரட்டுகிறது!



இயக்கங்கள் மாறுபடலாம், ஏக்கங்கள் ஒன்றுபட்டால் நமது இன்றைய வானமும் சிவந்து விடிய அந்த சோவியத்துப் புரட்சியின் நூற்றாண்டு தந்த வெளிச்சம் விடிவெள்ளியாய் நிற்பது உறுதி!  
சோசலிசமே மாற்று! ஏகாதிபத்தியக் கொள்ளைச் சுரண்டல் தோற்கும்! அமைப்பு ரீதியான மக்களின் போராட்டங்களே அதற்கான வழியாகும்!
சோவியத்துச் சோசலிசப் புரட்சியின் நூற்றாண்டு இந்த உத்வேகத்தை நம் இந்திய உழைப்பாளி வர்க்கத்திற்கும் தரும்! மார்க்சியமே வெல்லும்!
-------------------------------------------------------------------------.
இன்று நவம்பர்-07
சோவியத்துப் புரட்சியின் நூற்றாண்டு நிறைவு நாள்!
-------------------------------------------------------------- 
வெளியீட்டுக்கு நன்றி
“புதுகை வரலாறு” நாளிதழ் 
(நான்கு பகுதிகளாக 8,9,10,11-11-2017 நான்கு நாள்கள்!)
---------------------------------------------------------------------------------- 

8 கருத்துகள்:

  1. சோவியத் புரட்சி நூற்றாண்டு விழா வாழ்த்துகள். நீண்ட கட்டுரை. பொறுமையாகப் படித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. இந்திய உழைப்பாளி வர்க்கத்தினர் உத்வேகம் பெறட்டும் ஐயா
    நன்றி
    தம 1

    பதிலளிநீக்கு
  3. அப்போதைய நிலையை இப்போதைய நிலையுடன் ஒப்புநோக்கும்போது எதையெதையோ உலகம் எதிர்கொள்ளப் போகின்ற ஆபத்தான சூழ்நிலைக்குப் போகிறோமோ என்று அஞ்ச வேண்டியுள்ளது. ஆதிக்க மனப்பான்மை இப்போது இன்னும் அதிகமாகிப்போகின்றதே.

    பதிலளிநீக்கு
  4. ஒரு நீண்ட வரலாற்றைப் போலவே நீளமான ,ஆழமான பதிவு...இந்த பதிவின் உயிரோசையை உங்கள் குரலிலேயே கேட்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறேன்....ஒலிப்பதிவு செய்யாமல் போன என் குற்ற உணர்ச்சியை இந்த பதிவுப்போக்கியிருக்கிறது...மிக்க நன்றி அய்யா...

    பதிலளிநீக்கு
  5. Ayya, Padivar sandippu kurithu yethavathu thagaval vunda?

    பதிலளிநீக்கு
  6. நல்ல பகிர்வு.
    நீண்ட கட்டுரை...
    அருமை ஐயா.

    பதிலளிநீக்கு
  7. தங்கள் கருத்துக்களுக்கு நன்றி இதை போன்ற தகவல்களை தெரிந்துக்கொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள் Latest Tamil News

    பதிலளிநீக்கு
  8. இந்த வாரம் சாட்டர்டே போஸ்டுக்கு அழகப்பா பல்கலைக்கழகத்தில் நீங்கள் நிகழ்த்திய உரையை அனுப்ப வேண்டுகிறேன் சகோ

    பதிலளிநீக்கு